சென்னையில் தொடரும் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது;
கோப்புப்படம்
சென்னை,
நேற்று முன் தினம் (15-10-2025) கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (16-10-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது.
நேற்று முன் தினம் (15-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்றும் (16-10-2025) அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதன்காரணமாக இன்று (17-10-2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்படி நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழைபெய்து வருகிறது.