தமிழகத்தில் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை


தமிழகத்தில் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை
x
தினத்தந்தி 26 Sept 2023 9:38 AM IST (Updated: 26 Sept 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி, சென்னை தியாகராய நகர் சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் இன்று காலை 5.30 மணியளவில் அமலாக்க துறையினரின் சோதனை நடந்து வருகிறது. இதேபோன்று, ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பகுதிகளிலும், சென்னை தி.நகரில் உள்ள விஜய் அப்பார்ட்மெண்ட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறையினர் உள்பட பல்வேறு நபர்களிடம் சோதனையிடப்படுகிறது. தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சண்முகம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

கடந்த 20-ந்தேதி சென்னையில் 30 இடங்கள் உள்பட தமிழகத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். வருமானத்திற்கு கூடுதலாக சொத்து சேர்ப்பது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதன்படி, சென்னையின் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமாக நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்கள் எண்ணூர், வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ளன

இவற்றுக்கு தேவையான மின்சாதன பொருட்களை வினியோகம் செய்த நிறுவனங்கள் சார்பில் பல முறைகேடுகள் நடப்பதாக வருமானவரி துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனை முன்னிட்டு நடந்த அதிரடி சோதனையில், போலியாக ரசீதுகளை தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து மறுநாளும் இந்த சோதனை நீடித்தது. இந்த சூழலில், தமிழகத்தின் சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story