எல்லையில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்..... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்:  மத்திய அரசு
x
Daily Thanthi 2025-05-10 01:28:52.0
t-max-icont-min-icon

எல்லையில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது.

இந்தியாவின் பதிலடியால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், பகல் முழுவதும் பதுங்கியது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 300 முதல் 400 டிரோன்களை இந்திய நிலைகளை நோக்கி ஏவியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலம் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை உள்ள எல்லையோரத்தில் உள்ள 36 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது.

இவற்றையெல்லாம் நமது இந்திய ராணுவம் நடுவழியில் மறித்து ஏவுகணைகள் மூலம் அழித்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்கி, வலுவான பதிலடி கொடுத்தது.

இதனிடையே 3-வது நாளாக நேற்று இரவு 7 மணியளவில் காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா, பூஞ்ச், உரி, நவ்காம் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சேத விவரம் தெரியவில்லை. இதற்கும் இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

1 More update

Next Story