
தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக மாநாட்டுத்திடல்..
மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவில் இருந்தே மதுரையில் குவியத் தொடங்கி உள்ளனர்.
விடியற்காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர்.
மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகனம் பார்க்கிங் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர்.






