
துணை ஜனாதிபதி தேர்தல்:
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, செப்டம்பர் 9ம் தேதி (இன்று) துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21ம் தேதி நிறைவடைந்தது. துணை ஜனாதிபதி ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள எம்.பி.க்களும் தேர்தலில் வாக்களித்தனர்.
மொத்தமுள்ள 788 (மக்களவை 543, மாநிலங்களவை 245) உறுப்பினர்களில், மாநிலங்களில் 5 இடங்களும், மக்களவையில் ஒரு இடமும் காலியாக உள்ளது. இதனால் வாக்களிக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 782 ஆக இருந்தது. இதில் 392 உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இதில், பாஜகவில் 339 உறுப்பினர்கள் உள்பட கூட்டணியில் 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மேலும், ஒய்.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்கள் உள்பட மேலும் சில கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என தகவல் வெளியானது. இதன் மூலம் பாஜகவுக்கு சுமார் 450 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 12 பேரையும் சேர்த்தாலும் 325 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெறுவது உறுதி என தகவல் வெளியானது. இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.






