
மாநிலங்களவைக்கு எம்.பி.களாக தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகரன். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இதனால் நேற்று மாநிலங்களவை சுமுகமாக நடந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதவியேற்கின்றனர். இவர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் இன்று டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் இன்பதுரை, தனபால் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ராஜ்யசபா எம்.பி ஆக கமல்ஹாசன் பதவி ஏற்க உள்ள நிலையில், நேற்றைய தினம் டெல்லி சென்றார். அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, வில்சன் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற கமல்ஹாசன், முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன். இதை நான், பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






