ரஜினிகாந்துடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு

ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
சென்னை ,
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இறுதியாக சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வௌியாகின. இதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
இதுதவிர மற்றொரு திரைப்படம் ஹண்டர். மாபெரும் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மேலும், இது ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25-வது திரைப்படமாகும்.
இதுவரையில் பலருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்துவந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சேவையே கடவுள் எனும் நோக்கத்தில் "மாற்றம்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே. சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது, “சில மாதங்களுக்குப் பிறகு இன்று தலைவருடன் தரமான நேரத்தைச் செலவிட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடன் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் உண்மையிலேயே போற்றுகிறேன்” என ரஜினிகாந்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.






