விஜய்யின் “ஜனநாயகன்” டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சென்னை,
இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படம் வெளியாக 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது, ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் இன்று அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்க்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. ஒரு டிக்கெட் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான ரசிகர் மன்ற நிர்வாகியின் ஆடியோ வெளியாகி கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






