யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள் - செல்வராகவன்

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
சென்னை,
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். படம் இயக்குவது மட்டுமில்லாமல் நடித்தும் வருகிறார் செல்வராகவன். 'பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல்' உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் அடுத்ததாக '7ஜி ரெயின்போ காலனி' படத்தினை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அடிக்கடி படத்தின் அப்டேட்டுகள் மற்றும் ஒரு சில தகவல்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்விப்பார். இந்த நிலையில், செல்வராகவன் ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுரை கூறும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நீங்கள் ஒரு இலட்சியத்தை அடைய நினைப்பது ரொம்ப நல்லது. அதை ஏன் ஊர் எல்லாம் தம்பட்டம் அடிக்க வேண்டும். தான் என்ன செய்ய போகிறேன் என்பதை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அப்படி எல்லோரிடத்திலும் சொன்னால் அந்த காரியம் நிச்சயம் நிறைவேறாது. நீங்கள் பிறரிடத்தில் அதை சொன்னால், அவர்கள் நிச்சயம் சந்தோஷமடைய மாட்டார்கள். இந்த உலகத்தில் யாரும் மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள். நீங்கள் உதவி கேட்டு பிறர் செய்து கொடுத்து விட்டால், அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லி காட்டுவார்கள்" என்று கூறியுள்ளார்.






