டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க உத்தரவு

பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற பட நிறுவனத்தின் கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்துள்ளது.
Ilayaraja's songs in the movie Dude ordered to be removed
Published on

சென்னை,

தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, கருத்த மச்சான் மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த 100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி, உருமாற்றி பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பாடல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை, நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார். இளையராஜா தரப்பில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பாடலை உருமாற்றி உள்ளதால் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

டியூட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று, இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளதற்கு முகாந்திரம் உள்ளது. அவரது பாடல்களின் புனிதத்துக்கும், அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, டியூட் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை நீக்க ஏதுவாக ஒரு வார அவகாசம் வழங்க வேண்டும் என, பட நிறுவனம் தரப்பு கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com