நடிகை கவுரி கிஷனிடம் அநாகரிக கேள்வி - நடிகர் சங்கம் கண்டனம்

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் அநாகரிக கேள்வி எழுப்பிய யூ-டியூப்ருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகை கவுரி கிஷனிடம் அநாகரிக கேள்வி - நடிகர் சங்கம் கண்டனம்
Published on

சென்னை,

அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள அதர்ஸ் படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கிடையில் நேற்று நடந்த அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?, என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

யூடியூபரின் கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நடிகை கௌரி கிஷன் நன்றியும் கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் துணிச்சலாக கேள்வி எழுப்பிய நடிகை கவுரி கிஷனை குஷ்பு பாராட்டியுள்ளார்.

இந்தநிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் தவறான கேள்வி எழுப்பிய யூ-டியூப்ருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் ஒரு சில வக்கிரமான நபர்கள் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும், அவமானப்படுத்துவதும் கவலை அளிக்கிறது. இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம் என்று அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com