ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது - பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது - பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2026 10:59 PM IST (Updated: 8 Jan 2026 6:41 AM IST)
t-max-icont-min-icon

புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

"இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய நிலையில், சினிமாவை விட்டு முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படமே விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 'ஜனநாயகன்' படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் நாளை மறுதினம்(9-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி 9-ந்தேதி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர்கள் மற்றும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ந்தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, எங்கள் கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதான ஒன்றல்ல.

புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை, உங்கள் பொறுமையையும், தொடர்ச்சியான அன்பையும் வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுதான் ‘ஜனநாயகன்’ குழுவின் மிகப்பெரிய பலம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story