பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை.. இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு


பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை.. இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 1 Oct 2024 11:08 AM GMT (Updated: 1 Oct 2024 11:09 AM GMT)

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாகப் பதிவிட்டதற்காக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பதிவிட்ட சமூக வலைதளங்களில் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

சென்னை,

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்களை ஒட்டி இவர் தெரிவிக்கும் கருத்துகளே பல வேளைகளில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. இவர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறான கருத்து ஒன்றை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்.

திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வை உண்டாக்கியது.

பிரபல திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் செய்தி சமூக ஊடகத்தில் பேசுகையில், பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக தெரிவித்தார். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ஆதாரமற்ற வகையில் அவதூறு பரப்பியதற்காக மோகன் ஜி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரது ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது 'ஆதாரமின்றி எந்தக் கருத்தையும் பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது. ஒரு கருத்தைச் சொல்லும் முன் அது சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். எந்த வலைதளத்தில் இக்கருத்தினை தெருவித்தீர்களோ அந்த வலைதளத்தில் அக்கருத்துக்காக மன்னிப்பு கேட்டு பதிவிட வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story