'குட் பேட் அக்லி' படத்துடன் மோதும் ரஜினியின் 'கூலி'


குட் பேட் அக்லி படத்துடன் மோதும் ரஜினியின் கூலி
x

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். 'தேவா' என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு பணியில் இணைந்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.

இந்தநிலையில், தற்போது இப்படம் அடுத்த ஆண்டு மே 1-ந் தேதி வெளியாகும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் ஏற்கனவே அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே 23 திரைப்படமும் 2025-ம் ஆண்டு மே 1-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story