தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளன - நடிகை சனம் ஷெட்டி
கேரளாவை போன்று தமிழ் திரையுலகிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என்று நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை சனம் ஷெட்டி கூறியதாவது:-
பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து சொல்வதற்கே கஷ்டமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளது. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுபவர்களுக்கு, நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டு உள்ளார். பெங்களூருவில் 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. மராட்டிய மாநிலம் தானேவில் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது.
பெண்களை வெளியில் போகாதே, இது போன்ற ஆடைகளை போடாதே!, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக் கொண்டு இருக்கிறோம். இதை எவ்வளவு நாளைக்கு சொல்வது. பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பலரும் தப்பித்து வருகின்றனர். நிர்பயா வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதற்கான அனுமதி கேட்டு காவல் ஆணையரை சந்திக்க வந்து உள்ளோம். காவல்துறை அதிகாரிகள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் நிறைய பெண்கள் சந்திக்கும் பிரச்சினையாக இது உள்ளது. காவல்துறையின் ஆதரவு இல்லாமல் இதனை செய்ய முடியாது.
பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு குடும்பத்திற்கு உள்ளேயும் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தயக்கம் இல்லாமல் அனைவரும் முன் வந்து இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும். ஒரு மாற்றம் நிச்சயமாக தேவைப்படுகின்றது. வரும் சனிக்கிழமை அன்று நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என கூறினார். மேலும் மலையாள திரை உலகில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் சிக்கல் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சனம் ஷெட்டி,
ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இது போன்று ஒரு அறிக்கையை அவர்கள் கொண்டு வந்ததற்கு ஹேமா அவர்களுக்கும், கேரள அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளன. பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளது. கேரளாவை போன்று தமிழ் திரையுலகிலும் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்.
அட்ஜெஸ்ட்மண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற கொடுரமான சூழ்நிலைக்கு எதிராக நான் குரல் கொடுத்து உள்ளேன். உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.