ஐம்பதிலும் ஓட்டம் வரும் - உஷா ஸ்ரீதர்


ஐம்பதிலும் ஓட்டம் வரும் - உஷா ஸ்ரீதர்
x
தினத்தந்தி 4 Sep 2022 1:30 AM GMT (Updated: 4 Sep 2022 1:30 AM GMT)

21 கிலோ மீட்டர் தூரத்தை, ஒரு மணி நேரம் 39 நிமிடங்களில் கடந்தேன். என் வயதுக்கு அது ஒரு வெற்றிகரமான விஷயம் என அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்.

முப்பது வயது தாண்டும்போதே உடலாலும், மனதாலும் தளர்ச்சி அடையும் பல பெண்களுக்கு மத்தியில், ஐம்பது வயதுக்குப் பிறகும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறார் உஷா ஸ்ரீதர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், திருமணத்திற்குப் பின்பு மும்பைவாசி ஆகிவிட்டார். ஓவியம், யோகா ஆகியவற்றில் திறமை பெற்றிருந்தாலும், ஓட்டத்தின் மீது தனி ஆர்வம் கொண்டு செயல்படுகிறார். இதோ அவரே பேசுகிறார்.

''எனக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு அதிகம். பென்சில் மற்றும் சார்கோல் ஓவியங்களை தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறேன். பிட்னஸ், யோகா மற்றும் ஓட்டம் இவற்றில் எனக்கு ஈடுபாடு அதிகம். கடந்த ஐந்து வருடங்களாக மும்பையில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கும் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறேன்.

இது தவிர, விலங்குகள் மீது கொண்ட பிரியத்தின் காரணமாக தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தன்னார்வலராக செயல்பட்டு வருகிறேன்.

இதுவரை அரை மாரத்தான் ஓடிக்கொண்டிருந்த நான், முழு மாரத்தான் (42 கிலோமீட்டர்) ஓட வேண்டும் என்ற முயற்சிக்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். நான் நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் முன்பே பல வருடங்களாக ரன்னிங் ஸ்லோ ஜாக்கிங் செய்து கொண்டிருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் வந்தபோது, போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

அப்போது பிரபல முன்னாள் மாடல் மிலிந்த் சோமன் பெண்களை உடற்பயிற்சியில் ஊக்குவிக்கும் விதமாக வருடம்தோறும் 'பிங்கதான்' என்ற ஓட்டப்பந்தயம் நடத்தி வந்தார். பெண்கள் ஆர்வமாகக் கலந்து கொள்வதைப் பார்த்து, எங்கள் பகுதியில் உள்ள தமிழ்ப்பெண் மூலமாக நானும் அந்தக் குழுவில் சேர்ந்தேன்.

முதன்முதலாக ஐந்து கிலோமீட்டர் பந்தயம் ஒன்றில் ஓடினேன். 5 கிலோமீட்டரை 42 நிமிடத்தில் ஓடி முடித்தேன். அப்போது எனக்கு வயது ஐம்பதை நெருங்கி இருந்தது. இப்போது எனக்கு வயது 52.

இதற்கு முன்னால் நான் பள்ளியில் கூட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை. எனவே இந்த அளவு ஓட முடிந்தது எனக்கு மகிழ்ச்சியே.

எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் குழுவுடன் சேர்ந்து கோடைகால ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு ஓடினேன். பின்பு மழை நேரத்தில் நடக்கும் 'மான்சூன் ரன்ஸ்' போன்ற மழையில் ஓடும் 10 கிலோமீட்டர், 20 கிலோமீட்டர் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.

2018-ம் ஆண்டு முதல் மாதம் ஒருமுறை இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். முதல் போட்டியிலேயே 10 கிலோ மீட்டரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் முடித்தேன். அது எனக்கு மேலும் உற்சாகம் ஊட்டியது.

பின்னர் நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் போட்டிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். இவ்வாறு 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, 15 போட்டிகளில் கலந்து கொண்டு ஓடி இருக்கிறேன்.


வார இறுதி நாட்களில் 10 கி.மீ ஓட்டத்தைப் பயிற்சியாக மேற்கொள்வேன். வார நாட்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஐந்து கிலோ மீட்டர் வரை ஓடிப் பயிற்சி செய்வேன். என்னைப் பார்த்து எனது கணவருக்கும் ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் வந்து பங்கேற்க ஆரம்பித்தார்.

மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெற்ற கேன்தான் (புற்றுநோய் விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட கேன்சர் + மாரத்தான்) என்ற மாரத்தான் போட்டியிலும் பங்கு பெற்றேன். அதில் கலந்து கொள்ள முக்கிய காரணம், எங்கள் குழுவில் உள்ள ஒரு பெண்ணின் கணவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே தனியார் புற்றுநோய் மருத்துவமனை நடத்திய அந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். அதில் 10 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் ஓடி முடித்தேன்.

பிறகு பெங்களூருவில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும் போட்டியில் கலந்து கொண்டு ஓடினேன். இதில் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக ஓடுவார்கள். உதாரணமாக பத்து கிலோமீட்டர் தூரத்தை 25 நிமிடங்களில் கடக்கும் வீரர்கள் அதில் பங்கேற்பார்கள். நானும், எனது கணவரும் பெங்களூரு சென்று அதில் கலந்து கொண்டோம்.

இது போன்ற உள்ளூர் போட்டியாளர்களை அமெச்சூர் ஓட்டப் பந்தயக்காரர்கள் என்பார்கள். எனவே நாங்கள் ஓடி முடித்து, வேகமாக ஓடும் வீரர்கள் ஓடுவதைப் பார்த்த போது வியந்து போனோம். இயந்திர மனிதர்களைப் போல மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சென்னையில் 2018-ம் ஆண்டு மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சென்னை மாரத்தானில் மகிழ்ச்சியாகப் பங்கேற்றேன். அதன் பின்னர் மும்பை மாரத்தானில், எனது பயிற்சியாளரின் அறிவுரையின்படி‌ 21 கி.மீ. பயிற்சியை மேற்கொண்டு அரை மாரத்தான் போட்டியில் 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஓடினேன். 21 கிலோ மீட்டர் தூரத்தை, ஒரு மணி நேரம் 39 நிமிடங்களில் கடந்தேன். என் வயதுக்கு அது ஒரு வெற்றிகரமான விஷயம் என அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, மீண்டும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்வதற்காக என்னைத் தயார்படுத்தி வருகிறேன்'' என்கிறார் உஷா ஸ்ரீதர்.


Next Story