மனம்விட்டு பேசினால் குடும்பம் சிறக்கும்- உஷா விஜயராகவன்


தினத்தந்தி 11 Sep 2022 1:30 AM GMT (Updated: 11 Sep 2022 1:31 AM GMT)

இயல்பாகவே நான் மிகவும் அமைதியான பெண். எந்த விஷயத்தையும் ஆணித்தரமாக பேச மாட்டேன். இதுபோல சில குறைகள் என்னிடம் இருந்தன. அதை மாற்றிக்கொள்வதற்காக வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.

'எந்த விஷயத்தை நாம் ஆழமாக நினைக்கிறோமோ, அதற்கான வாய்ப்பு தானாகவே உருவாகும்' என்று தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக பேச ஆரம்பித்தார் உஷா விஜயராகவன். பணி ஓய்வுக்குப் பிறகு தோழிகளுடன் அரட்டை, டெலிவிஷன் தொடர்கள் என்று பொழுதை போக்கும் சலிப்பான வாழ்க்கை வாழ்வதற்கு விருப்பம் இல்லாத இவர், தனது ஓய்வுக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு எண்ணினார். சுங்கத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்புதான், முன்பைவிட அதிகமாக இயங்க ஆரம்பித்திருக்கிறார். சென்னையை சேர்ந்த இவர், இப்போது வாழ்வியல் பயிற்சியாளராக ஆலோசனைகளை அளித்து, பலரது வாழ்க்கையை மேம் படுத்தி இருக்கிறார்.

இதோ அவரே தொடர்கிறார்…

எனக்குத் தொழில் செய்வது மிகவும் பிடித்த விஷயம். ஓய்வு பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யலாம் என்று என்னுடைய தனித் தன்மையைப் பற்றிய தேடலை ஆரம்பித்துவிட்டேன். அப்போதுதான் 'வாழ்வியல் பயிற்சியாளர் ஆகலாம்' என்ற யோசனை தோன்றியது. அது தொடர்பான பயிற்சிகள் அனைத்தையும் முறையாக கற்றுக்கொண்டேன். இன்று அதன்மூலம் பலருக்கும் உதவி வருகிறேன்.

இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

இயல்பாகவே நான் மிகவும் அமைதியான பெண். எந்த விஷயத்தையும் ஆணித்தரமாக பேச மாட்டேன். இதுபோல சில குறைகள் என்னிடம் இருந்தன. அதை மாற்றிக்கொள்வதற்காக வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். அந்த வகுப்பு என்னை முழுமையாக மாற்றியது. அதன்பிறகு எனக்குள் இருந்த எதிர்மறையான எண்ணங்கள், அவநம்பிக்கைகள் அனைத்தும் விலகி விட்டன. அப்போதுதான் 'நாம் ஏன் இது போல் இருக்கும் மற்றவர்களுக்கு உதவக் கூடாது?' என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் வாழ்வியல் பயிற்சியாளராக உருவானேன்.

பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது?

ஓய்வு பெற்ற பிறகு எனது வாழ்க்கை மிகவும் அழகாக மாறி இருக்கிறது. வாழ்வியல் பயிற்சியாளராக மாறிய பின்னர், உலகளாவிய பயிற்சியாளர்களிடம் தொடர்பில் இருக்கிறேன். எகிப்து, சவுதி அரேபியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருக்கும் பயிற்சியாளர்களிடம் பழகும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன்.

உங்களிடம் பயிற்சி பெற்றவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

ஒரு பெண் தனது மாமியாருடனான உறவில் மிகுந்த சிக்கலில் இருந்தார். அவருக்கு வாழ்வின் யதார்த்தத்தைப் புரியவைத்த பின்பு, தற்போது இருவரும் நண்பர்கள் போல வாழ்ந்து வருகிறார்கள்.

சண்டை சச்சரவுகளுடன் இருந்த கணவன்-மனைவியின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு மனம் ஒருமித்த தம்பதிகளாக வாழ்கின்றனர். மற்றொருவர் குடிப் பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேவந்து, மறுபடியும் தன்னுடைய பணியைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்.

என்னுடைய வாழ்வியல் பயிற்சி பயணத்தில் இதுபோல பலரின் வாழ்க்கை மாறி இருக்கிறது. 'உங்களால் தான் என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாறுதல் கிடைத்திருக்கிறது' என்று அவர்கள் கூறு

வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

குடும்ப உறவுகள் சிறப்பாக இருப்பதற்கு வாழ்வியல் பயிற்சியாளராக உங்கள் அறிவுரை என்ன?

குடும்பத்தில் இருக்கும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்போடும், அரவணைப்போடும் இருப்பது முக்கியம். குடும்பத்தில் ஏற்படும் பிணைப்பு நாட்டையே ஆரோக்கியமான வழியில் நடத்திச் செல்லும்.

வளர்ந்த குழந்தைகளிடம் பேசுவதற்கு பல பெற்றோர் தயங்குகிறார்கள். 'அவர்களிடம் நமது பேச்சு எடுபடுமா?' என்பது போன்ற எண்ணங்களே இந்த தயக்கத்துக்கு காரணம். இதைத் தவிர்த்துவிட்டு குழந்தைகளிடம் பெற்றோர் மனம்விட்டு பேச வேண்டும்.

இவ்வாறு, நமக்குள் இருக்கும் தடைகளைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்கி வாழ்வை மேம்படுத்துவதற்கான பயிற்சியையே நான் அளிக்கிறேன்.

பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

பல பெண்கள் திறமை இருந்தும் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தாலும், குடும்பச் சூழல், நேரமின்மை போன்ற வரம்புகள் காரணமாக தயங்குகிறார்கள்.

குடும்ப உறுப்பினர்கள், பெண்களுக்கு உதவி புரிய வேண்டும். அவர்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும். குடும்ப உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் மனதளவில் திடமாக இருந்தால்தான், உறவுகளையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது, அனுசரிப்பது எல்லாம் மனம் திடமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

மனதை உறுதியாக வைத்துக்கொண்டால் எதுவும் சாத்தியம். எந்த விஷயத்தை நாம் ஆழமாக நினைக்கிறோமோ அதற்கான வாய்ப்பு தானாக உருவாகும். இதை வாழ்வியல் பயிற்சியாளராக மாறியபிறகு நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.


Next Story