ஜல்லிக்கட்டு காளைகளை நேசிக்கும் லாவண்யா


ஜல்லிக்கட்டு காளைகளை நேசிக்கும் லாவண்யா
x
தினத்தந்தி 4 Jun 2023 1:30 AM GMT (Updated: 4 Jun 2023 1:31 AM GMT)

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைவரும் எளிதாக பங்கேற்கும் வகையில் வழிமுறைகளை அமைத்தால், நமது பாரம்பரியம் காக்கப்படும் என்று நம்புகிறேன்.

மிழ் பாரம்பரியம் சார்ந்த விஷயங்களை, உலகுக்கு பறைசாற்றும் வேலையில் தீவிரமாக இயங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த லாவண்யா. வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளைகளைப் பற்றிய தகவல்களை தேடித்தேடி சேகரிக்கிறார். அவற்றை சமூக வலைத்தளங்கள் மூலம் அனைவருக்கும் பகிர்ந்து வருகிறார். தொழில்நுட்பம், இணையம், கணினி போன்றவற்றை தாண்டி, இயற்கையோடு இணைந்த வாழ்வில் கொண்டாட வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன என்று தன்னுடைய பதிவுகள் மூலம் இன்றைய தலைமுறைக்கு உணர்த்துகிறார்.

பட்டிமன்ற பேச்சாளர், தொகுப்பாளினி, யூடியூபர், வர்ணனையாளர், காளை வளர்ப்பு ஆர்வலர் என பல தளங்களில் இயங்கி வரும் லாவண்யா, தன்னுடைய பணிகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வர்ணனையாளர்களாக இருந்து சிறப்பித்த இரண்டு பெண்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் நடந்த சுவாரசியமான உரையாடல் இதோ...

உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, பெரிய குறவன்குடி தான் எனது சொந்த ஊர். இப்போது தேனி மாவட்டத்தில் வசிக்கிறேன். கணினி அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போதே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்றவற்றில் ஆர்வத்துடன் கலந்து கொள்வேன். அந்த சமயத்தில் எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள டி.வி சேனலில் தொகுப்பாளினியாக எனது பயணத்தை ஆரம்பித்தேன். அது தவிர, சில தனியார் நிறுவனங்கள் நடத்திய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினேன். தற்போது யூடியூபராகவும் செயல்பட்டு வருகிறேன். என்னுடைய யூடியூப் சேனலில் ஜல்லிக்கட்டு காளைகளைப் பற்றிய வீடியோக்கள், காளை வளர்ப்பவர்களின் நேர்காணல்கள் போன்றவற்றை பதிவிட்டு, நம்முடைய பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

கணினி அறிவியல் படித்த நீங்கள் ஜல்லிக்கட்டு காளைகள் மீது ஆர்வம் கொண்டது எப்படி?

கொரோனா பெருந்தொற்று காலம், என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்போதுதான் எனது யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். அதில் மதுரை, தேனி ஆகிய ஊர்களின் வரலாறுகளைக் கூறும் வீடியோக்களை முதலில் பதிவிட்டேன். கோவில்களின் தல வரலாறுகள் பற்றிய வீடியோக்களையும் பதிவிட்டு வந்தேன். அப்போதுதான் அந்த வருடம் வந்த பொங்கல் திருவிழாவில், மாட்டுப் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் பற்றிய தகவல்களை பதிவிடும் எண்ணம் தோன்றியது. அதற்காக, தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று காளைகளைப் பற்றி பேட்டி எடுத்து அதை வீடியோவாக யூடியூப்பில் பதிவிட்டேன். அது அதிக பார்வையாளர்களைப் பெற்றுத் தந்தது. அப்போது முதல் ஜல்லிக்கட்டு காளைகள் மேல் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களை யாரும் மறந்துவிட முடியாது. ஜல்லிக்கட்டு பற்றி முழுமையாக தெரியாதபோதே, நான் அந்த போராட்டங்களில் பங்கெடுத்து இருந்தேன். அப்போது முதலே ஜல்லிக்கட்டு பற்றிய என்னுடைய தேடல் ஆரம்பித்தது. அது தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளைப் பற்றி நான் தெரிந்து கொண்ட பல விஷயங்களை எனது யூடியூப் சேனலில் பகிர்கிறேன். இதற்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை பார்க்கும் இளைஞர்கள் பலர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கெடுக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியின் வர்ணனையாளர் ஆனது எப்படி?

நான் அவ்வப்போது ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளைப் பார்க்கச் செல்வேன். அத்தகைய நிகழ்வுகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கி வைப்பார்கள். அவ்வாறே, கரடிக்கல் என்ற ஊரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்திருந்த அமைச்சர் மூர்த்தி, அடுத்து சக்கரப்பட்டி என்ற ஊரில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டில் புதுமையாக 'பெண்கள் வர்ணனையாளராக இடம் பெறலாமே' என அழைப்பு விடுத்தார். அதன்பேரில் பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதிக்கு துணையாக, நானும் கலந்து கொண்டு அந்த ஜல்லிக்கட்டை தொகுத்து வழங்கினேன்.

உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி சொல்லுங்கள்?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், எனக்கு 'சிங்கப்பெண் விருது' கொடுத்தார்கள். பாரம்பரியம் சார்ந்த ஜல்லிக்கட்டு காளைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக அந்த விருது கொடுக்கப்பட்டது. பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் மரியாதை நிமித்தமாக எனக்கு நினைவு கேடயம் வழங்கி இருக்கிறார்கள். வெளியிடங்களில் என்னைப் பார்க்கும்போது இளம்பெண்களில் சிலர், 'எதிர்காலத்தில் உங்களை போலவே ஆக வேண்டும்' என்று கூறி இருக்கிறார்கள். இதை எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

காளை வளர்ப்பு ஆர்வலராக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பல ஊர்களில் ஜல்லிக்கட்டு காளைகளை செல்வந்தர்களைவிட, பாமர மக்களே அதிகம் வளர்க்கிறார்கள். அவற்றை பராமரிப்பதற்காக அவர்களுடைய வருமானத்தில் பெருமளவு தொகையை செலவிடுகிறார்கள். காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பாதுகாக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இப்போது ஆன்லைன் முன்பதிவு முறை வந்துவிட்டது. பாமர மக்கள் இதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைவரும் எளிதாக பங்கேற்கும் வகையில் வழிமுறைகளை அமைத்தால், நமது பாரம்பரியம் காக்கப்படும் என்று நம்புகிறேன்.

கிராமத்து பின்னணியைச் சேர்ந்த நீங்கள் இந்த துறையில் செயலாற்றுவதற்கு ஏதேனும் சவால்களை சந்தித்தீர்களா?

கிராமங்களில் இப்போதும் பெண்களுக்கு சில வரைமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நான், சில சமயங்களில் வெளியே தங்க நேரிடும். தொடக்கத்தில் என்னுடைய அம்மா பயந்து 'என்னைப் போக வேண்டாம்' என்றார். அந்த நேரங்களில் என்னுடைய அப்பா எனக்கு ஆதரவாக இருந்தார். ஜல்லிக்கட்டு நிகழ்வுக்காக நான் செல்லும் ஊர்களில் எல்லாம் இளைஞர்கள் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்துகிறார்கள். 'நான் போகும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பாக உணர்கிறேன்' என்பதை அறிந்து கொண்ட என் குடும்பத்தாரும், எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்கள்.


Next Story