முதலீட்டுத் துறையில் ஜொலிக்கும் நிக்கோல்


முதலீட்டுத் துறையில் ஜொலிக்கும் நிக்கோல்
x
தினத்தந்தி 28 Aug 2022 1:30 AM GMT (Updated: 28 Aug 2022 1:31 AM GMT)

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், மனித குலத்திற்கு நன்மைகளைத் தரும் நான்காம் விவசாய புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதில் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களின் கண்காணிப்பு, இயந்திரத்தின் உதவி போன்றவை அதிகமாகவே இருக்கும்.

முதலீட்டு துறையில் நிபுணத்துவம் பெற்று ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார், நிக்கோல் ஜங்கர்மேன்.

ஜெர்மனியில் பிறந்த நிக்கோல், தனது தந்தை தொழிலதிபராக இருப்பதால் தானும் தொழில் தொடங்க ஆசை கொண்டார். அதற்குரிய படிப்பை முடித்தபிறகு, தொழில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தொழில் முனைவோராக மாறினார்.

பின்பு படிப்படியாக முதலீட்டு துறையில் தனது அறிவை மேம்படுத்தி, தற்போது சர்வதேச அளவில் தனது நிறுவனம் மூலம் முதலீட்டு ஆலோசனைகளை கொடுத்து வருகிறார்.

2017-ம் ஆண்டு தொழிலதிபரான பெர்டினாண்டோ பெரேட்டி என்பவரை திருமணம் செய்த நிக்கோல், தற்போது குடும்பத்தோடு லண்டனில் வசித்து வருகிறார்.

ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலி, போர்ச்சுகீசியம் போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

புதுமையான விஷயங்களை கண்டுபிடித்திருந்தும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவித்தும், தனது நிறுவனத்தின் மூலம் நிதி சார்ந்த உதவி அளித்தும், முதலீடு செய்து வருகிறார்.

முதலீட்டு துறையில் தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைக் கொண்டு, எவற்றில் எல்லாம் முதலீடு செய்யலாம் என நிக்கோல் கூறும் ஆலோசனைகள் இதோ:

விவசாயம் மற்றும் உணவு:

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், மனித குலத்திற்கு நன்மைகளைத் தரும் நான்காம் விவசாய புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதில் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களின் கண்காணிப்பு, இயந்திரத்தின் உதவி போன்றவை அதிகமாகவே இருக்கும். இதனால் விவசாயத்தில் ஆர்வமுள்ள தொழிலதிபர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

சிறந்த முதலீட்டாளராக இருக்க வேண்டும் என்றால், மனிதர்களிடையே என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும். 2020-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை, பேரிடர் காலத்தில் குறிப்பிட்ட மாற்றம் ஏற்பட்ட துறைகளில் முதன்மையானது உணவுத்துறை. பலரும் தற்போது சைவ உணவை அதிகமாக விரும்பி நுகர்கிறார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு சைவ உணவை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

தொழில்நுட்பம், சுகாதாரம்:

சுகாதாரத் துறையில், பயோ டெக்னாலஜி மற்றும் நானோ டெக்னாலஜி போன்ற துறைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுகாதாரத் துறையில் புது விஷயங்களை கண்டுபிடித்து, மனிதனுக்கு சேவை செய்யும் புதிய நிறுவனங்களில் முதலீடு செய்வது சிறந்த முதலீடாகும்.

சிறந்த தொழில் முனைவோராக மட்டுமல்லாமல், சர்வதேச முதலீட்டாளராகவும் ஜொலிக்கும் நிக்கோல், ''உங்களுடைய மனது என்ன சொல்கிறதோ, அதை தைரியமாக செயல்படுத்த வேண்டும். உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே தீர்வு காண வேண்டும். கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து வருத்தப்படாமல், இந்த கணத்தில் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்யுங்கள்" என்று இளம் பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்


Next Story