ஆஸ்கர் நாயகி எடித் ஹெட்


ஆஸ்கர் நாயகி எடித் ஹெட்
x
தினத்தந்தி 14 Aug 2022 1:30 AM GMT (Updated: 14 Aug 2022 1:30 AM GMT)

எடித் ஹெட்டின் நேர்த்தியான ஆடை வடிவமைப்பும், அதில் இருக்கும் தனித்தன்மையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டார்.

லை உலகில் ஈடுபட்டவர்கள் அனைவருக்குமே ஆஸ்கர் விருது வாங்கும் கனவு இருக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த விருதுக்கு 35 முறை பரிசீலிக்கப்பட்டு, 8 முறை சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர் எடித் ஹெட். ஆடை வடிவமைப்பில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் 1897-ம் ஆண்டு பிறந்தவர் எடிட் கிளாரி போஸ்னர். தன்னுடைய இளங்கலையைப் பிரெஞ்சு மொழியிலும், முதுகலைப் பட்டத்தை ரோமானிய மொழியிலும் கற்றுத் தேர்ந்தவர். இளமைக் காலத்தில் ஒரு பள்ளியில் பிரெஞ்சு மொழி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர், பின்னர் ஸ்பேனிஷ் மொழி கற்பிக்கும் ஆசிரியராக சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு பெற்றார்.

தனக்குள் இருந்த கலை ஆர்வத்தால், அதேபள்ளியில் மாணவர்களுக்கு ஓவிய வகுப்பு எடுப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். ஓவியத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மாலை நேரத்தில் மற்றொரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓவியம் குறித்து படித்தார். பின்பு ஆடை வடிவமைப்பில் தேர்ச்சி பெற்று, தன்னுடைய 26 வயதில் ஆடை வடிவமைப்பாளராக ஹாலிவுட் திரைப்படங்களில் பணியைத் தொடங்கினார்.

இவருடைய நேர்த்தியான ஆடை வடிவமைப்பும், அதில் இருக்கும் தனித்தன்மையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக ஹாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டார்.

1938-ம் ஆண்டு, பிரபலமான பாரமவுண்ட் நிறுவனத்தில், நூற்றுக்கணக்கான பணியாளர்களைக் கொண்ட ஆடைத் துறையின் பொறுப்பாளராகவும், தலைமை வடிவமைப்பாளராகவும் பணியேற்றார். அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான ஆடை வடிவமைப்பாளராக மாறினார்.

திரைப்படங்களில் இவர் வடிவமைத்த ஆடைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. கலைநயத்தையும் தாண்டி, ஏதேனும் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் தன்னுடைய ஆடை வடிவமைப்பு இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

இவ்வாறு நாற்பத்தி மூன்று ஆண்டுகாலம் ஹாலிவுட் திரையுலகில் முதன்மையான ஆடை வடிவமைப்பாளராகத் திகழ்ந்தார். 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.

அதிக முறை ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய எடித், தன்னுடைய 84-வது வயதில் மறைந்தார்.

"நாம் அணிந்திருக்கும் ஆடை, நமக்கு வேண்டியவற்றைப் பெற்றுத்தரும். ஆடை என்பதும் நம்மில் ஓர் அங்கமே" என்று, தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் எடித்.


Next Story