'நோபல் பரிசு' பெற்ற முதல் இஸ்லாமிய பெண்
1975-ம் ஆண்டு ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள 26-வது பிரதேச நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை அலங்கரித்த இளம் மற்றும் முதல் பெண்மணி இவரே.
பெண்கள் தங்கள் திறமையையும், தைரி யத்தையும் கையாண்டு வாழ்வில் அவ்வப்போது வரும் தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி ஜெயித்து வருகிறார்கள். அவ்வாறு, தன் வாழ்க்கை முழுவதுமே, மனித உரிமைகளை மீட்டெடுப்பதிலும், பெண்கள், குழந்தைகள், அகதிகள் ஆகியோரின் உரிமைகளை மேம்படுத்துவதிலும் மற்றும் பாதுகாப்பதிலும் தன்னை அர்ப்பணித் திருப்பவர் 'ஷிரின் எபாடி'. ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
ஆரம்ப கால வாழ்க்கை:
ஈரானில் உள்ள ஹமதானில் 1947-ம் ஆண்டு பிறந்தார், ஷிரின் எபாடி. அவரின் தந்தை ஒரு பேராசிரியர் என்பதால், தன் மகளை நன்றாக படிக்க வைத்தார். சட்டம் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கல்லூரியில் சட்டத் துறையை தேர்ந்தெடுத்தார் ஷிரின். படிப்பை முடித்தவுடன், சட்ட பயிற்சி மேற்கொண்ட பிறகு, 23 வயதில் ஈரானின் முதல் பெண் நீதிபதிகளில் ஒருவரானார். பின்பு 1975-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நெகர் மற்றும் நர்கெஸ் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
சட்டத்துறையில் சந்தித்த தடைகள்:
தீர்ப்புகளை வழங்கும் விதத்தில் வெகுவாக அனைவரையும் கவர்ந்தார். 1975-ம் ஆண்டு ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள 26-வது பிரதேச நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை அலங்கரித்த இளம் மற்றும் முதல் பெண்மணி இவரே.
1979-ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. புரட்சியாளர்கள், 'பெண்கள் நீதித்துறையில் இருக்கக்கூடாது. அவர்கள் தீர்ப்பு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது' என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பெண் நீதிபதிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
மனித உரிமைகளை மீட்டெடுத்தல்:
வழக்கறிஞர் உரிமம் இருந்ததால் 1992-ம் ஆண்டு தனிப்பட்ட வழக்கறிஞர் பயிற்சியை தொடங்கினார்.அரசியல் மற்றும் மனித உரிமை வழக்குகளை கையாள்வதில் துணிந்து செயல்பட்டார். நாட்டையே உலுக்கிய பல அரசியல் வழக்குகளை கையாண்டார். இவற்றால் கோபம்கொண்ட ஈரான் குடியரசு, அரசுக்கு எதிராக பொய்களை பரப்பி வருகிறார் என்று அவரை சிறையில் அடைத்தது. மேல்முறையீடு மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக பின்னர் அவரது சிறை தண்டனை அபராதமாக மாற்றப்பட்டது.
நோபல் பரிசு:
மனித உரிமைகளை மீட்டெடுப்பதற்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கும் சேவை செய்ததால் 2003-ம் ஆண்டு அமைதிக்கான 'நோபல் பரிசு' ஷிரின் எபாடிக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் ஈரானிய மற்றும் முதல் இஸ்லாமிய பெண் ஷிரின். தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை மனித உரிமைகளின் பாதுகாவலர்களுக்காகவும், அரசியல் கைதிகளின் குடும்பங்களை
ஆதரிக்கவும் பயன்படுத்தினார். அவர் அமைத்த மையம், மனித உரிமை அமைப்புகளில் முக்கியமானதாகத் திகழ்ந்தது. அதற்கு சர்வதேச கவுரவம் கிடைத்தது.
தொடர்ந்து வலுத்த ஈரான் அரசாங்கத்தின் எதிர்ப்பால், இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார். நாடு கடத்தப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், மனித உரிமைகளை மீட்டெடுப்பதிலும், அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.