உறவுகளைப் பலப்படுத்துவது பெண்களின் குணம் - சிந்து மேனகா


தினத்தந்தி 23 May 2022 5:30 AM GMT (Updated: 23 May 2022 5:30 AM GMT)

உறவுகளைப் பலப்படுத்துவது இயல்பிலேயே பெண்களின் குணம். மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள். இது குழந்தைகளின் வளர்ப்பு, தேவைகள், படிப்பு போன்றவற்றை பாதிக்கும்.

"வ்வொரு பெண்ணும் தினசரி நடவடிக்கைகளுக்கான அட்டவணையில், ஓய்வு, உடற்பயிற்சி, தூக்கம், நட்பு ஆகியவற்றுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்" என்கிறார் சிந்து மேனகா. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த இவர் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். இலக்கிய மற்றும் ஆன்மிக ஆய்வாளர், குழந்தைகள் செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர், ஓவியர், மனநல ஆலோசகர் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டி...

"எனது கணவர் கார்த்திகேயன். மகன் ஹர்ஷித், ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். நான் மனநல நிலையம் நிறுவி, அதன் மூலம் மனநல ஆலோசனைகள் கொடுத்து வருகிறேன். எங்கள் நிறுவனம் மயிலாடுதுறை மற்றும் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறப்புக் குழந்தைகளின் நலன் மற்றும் ஆரம்ப நிலையிலேயே குழந்தையின் வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, சரியான மருத்துவ மற்றும் சிகிச்சை முறையினை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை அணுகி, அங்கே இருக்கும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்புக் கல்வித் திட்டத்தின் அவசியத்தை உணர்த்தி வருகிறேன்.

எல்லா பள்ளியிலும் சிறப்புக் கல்வியின் அவசியம், தனிப்பட்ட கல்வித் திட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, சிறப்பு நிலையில் உள்ள குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஆலோசனையும் வழங்குகிறேன். பெண் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றிய விழிப்புணர்ச்சியை அரசுப்பள்ளிக் குழந்தைகளிடம் ஏற்படுத்தி வருகிறேன்.

மாணவர்களின் மன நலனை மேம்படுத்த என்ன செய்கிறீர்கள்?

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் காணப்படும் மாற்றங்களை சரியான நேரத்தில் கண்டுபிடித்து பயிற்சி அளித்தால் அதில் இருந்து அவர்களை பாது காக்க முடியும் என்ற உண்மையை அறிவுறுத்தி வருகிறோம்.

கொரோனோ காலத்தில், குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிக்கத் தவறிய குழந்தைகளுக்கு எங்கள் அமைப்பின் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கினோம்.

மாணவர்கள் அனைவருமே ஏதோ ஒரு திறன் கொண்டவர்கள் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியரின் ஒத்துழைப்பால் மாணவர்கள் முன்னேற்றம் அடைய முடியும். அவர்கள் அதிக நேரம் செலவிடுவது பள்ளியில் தான். ஆசிரியர் தன் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களை பற்றிய புரிதலும், நம்பிக்கையும் கொண்டிருந்தால், அவர் களின் மனநிலையில் எந்த முரண்பாடும் வராது.

மாணவர்களின் கவனம் சிதற இப்போது பல வகையான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரியவர்களைப் பார்த்தே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள், ஒரு நாள் தங்கள் மொபைல் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், மாணவர்களின் நிலைப்பாட்டினை மாற்ற முடியும்.

பிள்ளைகளின் வளர்ச்சியில், பெற்றோர்களின் பொறுப்பையும் அறிவுறுத்தி வருகிறோம். இதில் குழந்தைகள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்குப் பெற்றோர்கள் செவி சாய்க்க வேண்டும். அதற்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதன் மூலம், மாணவர்கள் மரியாதை கொண்டு தன்னிலை புரிந்து செயல்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன. எனவே, மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் சமமான பங்கு உள்ளது.

தற்போது பெண்கள் அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்களே. இதை தவிர்ப்பதற்கு உங்களது ஆலோசனை என்ன?

இன்றைய பெண்கள் ஒரே நேரத்தில் பல பாத்திரங்களை வகிக்கிறார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் நேரத்தை ஒதுக்குவதற்குத் திணறுகிறார்கள். ஓய்வு நேரம், உடற்பயிற்சி, நட்பு மற்றும் தூக்கம் போன்றவற்றுக்கு ஒரு பெண்ணின் தினசரி அட்டவணையில் இடம் இருப்பது நல்லது. எல்லா வேலைகளையும் தாங்களே செய்யாமல், குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளலாம்.

உறவுகளைப் பலப்படுத்துவது இயல்பிலேயே பெண்களின் குணம். மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, வேலை செய்யும் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வதையோ அல்லது வேலையில் கவனம் செலுத்துவதையோ குறைக்கிறார்கள். இது குழந்தைகளின் வளர்ப்பு, தேவைகள், படிப்பு போன்றவற்றை பாதிக்கும்.

பணியாற்றும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?

உங்களுடைய நாளை சரியாகத் திட்டமிட்டு தொடங்குங்கள். உங்களது தேவைகளில் தெளிவாக இருங்கள். நீங்கள் வேலை செய்யும் இடத்தினை வசதியாக அமைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இது உங்கள் வேலையில் மனம் இலகுவாகச் செயல்பட உதவும்.

நீங்கள் பெற்ற விருதுகள் என்ன?

கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக உரை நிகழ்த்தி இருக்கிறேன். பல குழந்தைகளின் நிலையை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, அவர்களை இயல்பான வாழ்க்கை முறைக்கு உட்படுத்துவதன் மூலம், பெற்றோரிடமிருந்து வரும் ஆனந்தக் கண்ணீரையே பெரிய விருதாகக் கருதுகிறேன். என் செயல்பாட்டினை இதுவரை நாங்கள் விளம்பரப் படுத்தியதில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே முனைகின்றோம்.

உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் சரியான நேரத்தில் குழந்தைகளின் திறமைகள் மற்றும் குறைகளை கண்டறிய அமைப்பு ஏற்படுத்து வதே எங்களது அடுத்த செயல்பாடு.

சிறப்புக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி, சிறப்பு நிலையில் உள்ள குழந்தைகளுக்கான தேவைகளை அரசின் மூலமோ அல்லது அரசுசாரா அமைப்புகளின் மூலமோ வழங்க வேண்டும் என்

பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.


Next Story