அஞ்சல் அட்டையில் அற்புதக்கலை


அஞ்சல் அட்டையில் அற்புதக்கலை
x
தினத்தந்தி 7 Aug 2022 1:30 AM GMT (Updated: 7 Aug 2022 1:30 AM GMT)

ஓவியங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று சிரமப்பட்டு வரைந்தேன். கொரோனா காலகட்டத்தில், நான் வரைந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். என் சுற்று வட்டார மக்கள் அதை வாங்கத் தொடங்கினார்கள். நாளடைவில் கேரளா, பெங்களூரு, கோவா என பல இடங்களில் இருந்து நிறைய பேர் ஆர்டர் செய்யத் தொடங்கினார்கள்.

காலம் மாறும்போது, மனிதர்களும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே வருகின்றனர். சில தலைமுறைகளுக்கு முன்பு தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற வசதிகள் பெரும்பாலான இடங்களில் கிடையாது. தபால் அட்டைதான் நடுத்தர வர்க்கத்தின் தொடர்பு சாதனமாக இருந்தது. எந்த செய்தியாக இருந்தாலும், ஒரு தபால் அட்டை மூலம் தெரிய வரும். தொலைதூரத்தில் இருந்தாலும் நமது உணர்வுகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்ல உதவியது தபால் அட்டை. இன்றைய காலகட்டத்தில் தபால் அட்டை பயன்பாடு குறைந்து போய்விட்டது.

சென்னையைச் சேர்ந்த பத்மா மாலினி, தபால் அட்டையை மீட்டெடுக்கும் நோக்கத்தில் அதை வைத்து பல விதமான கைவினைப் பொருட்களைச் செய்து வருகிறார். அவரது பேட்டி.

''எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில். திருமணம் ஆனதும் சென்னையில் குடியேறினேன். எனது தந்தை நன்றாக ஓவியம் வரைவார். எங்கள் குடும்பத்தில் அனைவரும் கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள். ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, சிறிய அளவில் படங்களை வரைந்து வந்தேன். திருமணத்திற்குப் பிறகு பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஓவியத்தில் அடிப்படை முறைகளைக் கற்றுக் கொண்டேன்.

எனது தந்தையின் இறப்புக்கு பிறகுதான் என் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போதுதான் என்னுடைய தனித்திறமையைத் தீவிரமாக்க விரும்பினேன்.

என்னுடைய கலைப் பயிற்சி முகாமில் எம்.எப். ஹுசேன் பற்றி அறிந்தேன். அவர் எங்கு சென்றாலும், தபால் அட்டைகளை உடன் கொண்டு செல்வார். அதில் ஓவியங்களை பதிவு செய்வார் என்று அறிந்தேன். இந்த செயல் என்னை மிகவும் கவர்ந்தது. நானும் இதையே பின்பற்றலாம் என்று முடிவு செய்தேன்.

"தபால் அட்டையில் ஓவியம் வரைவது சுலபமானது இல்லை. அதில் வரையப்படும் கோடுகள் மிக துல்லியமாக இருக்க வேண்டும். தபால் அட்டையை வாங்கி, அதில் முன் பக்கத்தில் வித விதமான படங்களை வரைந்து வந்தேன்.

ஓவியங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று சிரமப்பட்டு வரைந்தேன். கொரோனா காலகட்டத்தில், நான் வரைந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தேன். என் சுற்று வட்டார மக்கள் அதை வாங்கத் தொடங்கினார்கள். நாளடைவில் கேரளா, பெங்களூரு, கோவா என பல இடங்களில் இருந்து நிறைய பேர் ஆர்டர் செய்யத் தொடங்கினார்கள்.

தொடர்ந்து, சென்னையிலும் நான் வரைந்த படங்களைக் காட்சிப்படுத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வருமானத்தைத் தவிர்த்து, என்னுடையை கலையை ரசிக்கும் ரசிகர்களின் திருப்தியே என்னுடைய மகிழ்ச்சி'' என்கிறார் ஓவியர் பத்மா மாலினி.


Next Story