வருமான வரி பதிவில் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்


வருமான வரி பதிவில் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
x
தினத்தந்தி 26 Feb 2023 7:00 AM IST (Updated: 26 Feb 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரிச்சேவையில் என்னென்ன விலக்குகள், எந்தெந்த திட்டங்களின் கீழ் பெண்களுக்கு நன்மைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

ந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள மக்கள் தொகையில், 48 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்வதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்வதும், தொழில் செய்வதும், பொருளாதார ரீதியில் யாரையும் சாராமல் சுதந்திரமாக இருப்பதும் முக்கியமானது. இந்த நிதியாண்டின் முடிவில், வருமான வரிச்சேவையில் என்னென்ன விலக்குகள், எந்தெந்த திட்டங்களின் கீழ் பெண்களுக்கு நன்மைகள் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் இதோ...

1. சுகன்ய சம்ரிதி யோஜனா:

மத்திய அரசின் 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டதுதான் 'சுகன்ய சம்ரிதி யோஜனா' என்ற திட்டம். பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் இந்தத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கி ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை டெபாசிட் செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 21 ஆண்டுகள் முடியும் வரை இதன் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை. இந்தக் கணக்கின் மீது ஆண்டுதோறும் கூட்டப்படும் வட்டிக்கு வருமானவரிச் சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

2. மருத்துவ காப்பீடு:

வருமானவரிச் சட்டத்தின்படி தனிநபர் ஒருவர் மருத்துவ காப்பீடு எடுத்திருந்தால், வருடத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் வரை (மூத்த குடிமகள் என்றால் ரூபாய் 50 ஆயிரம் வரை) வரி விலக்கு பெறலாம். இதை தனக்காகவும், தன்னுடைய கணவன், மகள், பெற்றோர் ஆகிய உறவுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. வங்கி சேமிப்பு கணக்கு:

80 TTA பிரிவின் கீழ் சேமிப்புக் கணக்கில் பெறப்படும் வட்டிக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இப்போது பல வங்கிகளிலும் பெண்களுக்கு என சிறப்பு சேமிப்பு கணக்கு வசதிகள் உள்ளன. அதன் மூலமாகவும் அவர்கள் பல நன்மைகளைப் பெறலாம்.

4. வீட்டுவாடகை:

தற்போதயை காலகட்டத்தில், வேலைக்காக சொந்த ஊரை விட்டு செல்பவர்கள் அதிகம். அவ்வாறு மற்றொரு ஊருக்குச் சென்று வசிக்கும்போது வாடகை வீட்டில் தங்க நேர்ந்தால், அங்கு கொடுக்கும் வாடகையை வரிச் சலுகைகளுக்காக அவர்கள் கணக்கு காட்ட முடியும். அவர்கள் வாங்கும் சம்பளம், வாடகை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து இவை அமையும். சுயதொழில் செய்யக்கூடிய பெண்களுக்கு இந்தப் பிரிவின் கீழ் சலுகைகள் கிடைக்காது. ஆனால், வருமான வரிச்சட்டத்தின் 80 GG பிரிவின் கீழ் இவர்கள் சலுகைகளைப் பெற முடியும்.

5. இதர சலுகைகள்:

கல்விக்கடன், வீட்டுக்கடன், மூத்த குடி மக்களுக்கான சேமிப்புத் திட்டம், பி.பி.எப், ஸ்டாம்ப் ட்யூட்டி உள்பட பல்வேறு திட்டங்களை பெண்கள் தங்களுக்கான வருமான வரிச்சலுகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Next Story