இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 16 July 2023 1:30 AM GMT (Updated: 16 July 2023 1:30 AM GMT)

கணவர் வெளியூருக்கு செல்லும் தருணங்களில் அவருக்காக ஏங்குவதை தவிர்த்து, அவர் திரும்பி வந்தவுடன் அவருடன் இருக்கும் பொழுதுகளை எவ்வாறு மகிழ்ச்சியோடு செலவிடுவது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். இதனால் உங்கள் மனம் மற்ற உறவுகளுக்கு இடம் கொடுக்காமல் கட்டுப்படும்.

1. நான் இல்லத்தரசி. என்னுடைய கணவர் தனது தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். அந்த சமயங்களில் நான் வெளியில் செல்வதற்கு எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆட்டோவை சவாரிக்கு அழைப்பேன். இவ்வாறு எனக்கும் அந்த ஓட்டுனருக்கும் இடையே நட்பு ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அது தவறான பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்த தருணத்தில், நான் சுதாரித்துக்கொண்டு அவரோடு பழகுவதை நிறுத்திக்கொண்டேன். ஆனாலும் ஏதோ ஒரு குற்றவுணர்வு என்னை தினமும் வாட்டிக்கொண்டு இருக்கிறது. இதில் இருந்து நான் எவ்வாறு வெளியே வருவது?

குற்ற உணர்ச்சியின் காரணமாக நீங்கள் துன்பப்படுவதை என்னால் உணர முடிகிறது. உங்கள் கணவர் அடிக்கடி வெளியூர் பயணம் செல்வதால், நீங்கள் அளவுக்கு அதிகமான தனிமையை உணர்ந்திருக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலைதான் உங்கள் எண்ணங்களை மற்றொரு நபரை நோக்கி கொண்டு சென்றிருக்கிறது. இவ்வகையான எண்ணங்கள் தற்காலிகமானவையே. இருப்பினும், அந்த எண்ணங்களின் வசம் நீங்கள் ஈர்க்கப்படுவதற்கு முன்பு, புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டியது அவசியம். இப்போது உங்கள் கணவருடன் மகிழ்ச்சியாக செலவிடுவதற்கு உங்களுக்கு கிடைக்கும் நேரங்களை, இத்தகைய குற்ற உணர்ச்சியால் வீணாக்காதீர்கள். கணவர் வெளியூருக்கு செல்லும் தருணங்களில் அவருக்காக ஏங்குவதை தவிர்த்து, அவர் திரும்பி வந்தவுடன் அவருடன் இருக்கும் பொழுதுகளை எவ்வாறு மகிழ்ச்சியோடு செலவிடுவது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். இதனால் உங்கள் மனம் மற்ற உறவுகளுக்கு இடம் கொடுக்காமல் கட்டுப்படும். உங்கள் கணவருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவுக்கு இணையாக, வேறு எந்த உறவையும் ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள்.

2. நான் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறேன். நானும், பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்கள் மூவரும், கல்லூரியிலும் பிரியாமல் ஒரே வகுப்பில் படித்து வருகிறோம். அதில் ஒரு மாணவனை நான் 9-ம் வகுப்பில் இருந்து ஒருதலையாக காதலித்து வருகிறேன். ஆனால் அவன் என்னுடைய தோழியை காதலிப்பதையும், அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதையும் சில மாதங்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன். அதில் இருந்து என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எனது தோழியை பார்த்தாலே எரிச்சல் வருகிறது. இதில் இருந்து நான் வெளியேவர வேண்டும். நன்றாக படித்து முன்னேற வேண்டும். எனக்கு ஆலோசனை கூறுங்கள்.

நீங்கள் அனுபவிக்கும் உணர்வுகள் மிகவும் இயல்பானவையே. உங்களது சூழ்நிலையில் உள்ள எவரும் இதை அனுபவிப்பார்கள். அந்த மாணவனோடு பல வருடங்கள் நட்பாக பழகி வருகிறீர்கள். இருப்பினும் உங்களது உணர்வுகளை அவரிடம் தெரிவிக்க விடாமல், உங்களை தடுத்தது எது என்று யோசித்து பாருங்கள். நீங்கள் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து, அந்த மாணவன் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்பதை பற்றி அவரோ, அந்த பெண்ணோ அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே அவர்கள் உங்களுக்கு துரோகம் இழைக்கவில்லை. நீங்கள் உங்களுடைய தோழியை பார்த்தவுடன் வெளிப்படுவது பொறாமை உணர்வு மட்டுமே. உணர்ச்சிப்பூர்வமான கண்ணோட்டத்தை விட, நடைமுறைக்கு ஏற்றவாறு இதை அணுகுவதே சரியானது. சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டால் நீங்கள் இதில் இருந்து விரைவாக வெளியே வர முடியும். இதில் இருந்து எளிதாக மீள்வதற்கு நீங்கள் ஒரு மனநல நிபுணரை அணுகுவது சிறந்தது.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


Next Story