இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 23 July 2023 1:30 AM GMT (Updated: 23 July 2023 1:30 AM GMT)

உங்களது தாயை கவனித்துக்கொள்ளும் உங்கள் பொறுப்பு, உங்களுடைய திருமண வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. தாய்மை அடைவதை தள்ளிப்போடுவதற்கு இதுவே காரணம் என்றால், இது காலவரையற்ற காத்திருப்பாகும். உங்கள் தாயின் இந்த நிலை நிரந்தரமானது மற்றும் நீங்கள் அதில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

1. நானும், எனது சகோதரியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள் போல பழகி வருகிறோம். இருவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கிறார்கள். சிறுவயதில் எல்லா சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போது சிறு பிரச்சினை என்றாலும் எனது சகோதரி என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. நான், அவளை பலமுறை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்டால்தான் மீண்டும் பேச ஆரம்பிக்கிறாள். "உறவில் ஒருவரே தொடர்ந்து விட்டுக்கொடுத்து செல்வது தவறு. நீயும் பேசாமல் இரு. அவளே வருவாள்" என்று என் கணவர் கூறுகிறார். இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது?

உங்களுடைய தங்கை உங்களுடன் பேசாததால் ஏற்படும் துயரத்தை, உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை அவள் புரிந்து கொண்டிருக்கக்கூடும். உங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டும் என்று, நீங்களே முதலில் அவளை அணுகுவது தெரிகிறது. ஆனால் இத்தகைய செயல், தற்காலிக தீர்வை மட்டுமே தரக்கூடும். இந்த நிலை மாற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், மாற்றத்தை உங்களிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நீங்களே முதலில் பேசிவிடுவதால் தன்னுடைய தவறை அவள் உணர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. உங்கள் தங்கை உங்களிடம் பேசாதபோது, நீங்கள் அடையும் துன்பத்தை தாங்கிக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். அவள் அவளுடைய எண்ணங்களை செயல்படுத்தவும், அவள் எங்கு மாற வேண்டும் என்பதை உணரவும், அவளுக்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள். நிரந்தரமான நல்ல தீர்வு நிதானமாகவே நிகழும். அதுவரை பொறுத்திருங்கள்.

2. எனக்கு வயது 32. என்னுடைய தாய் கடந்த 5 ஆண்டுகளாக ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நான், என்னுடைய கல்லூரி நண்பரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டேன். தாயை கவனித்துக்கொள்வதால் இதுவரை குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி யோசிக்கவில்லை. எனது கணவர், என்னுடைய தாயை காப்பகத்தில் சேர்க்கும்படி கூறுகிறார். ஆனால் என் மனது அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கிறேன்.

உங்களது தாயை கவனித்துக்கொள்ளும் உங்கள் பொறுப்பு, உங்களுடைய திருமண வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது. தாய்மை அடைவதை தள்ளிப்போடுவதற்கு இதுவே காரணம் என்றால், இது காலவரையற்ற காத்திருப்பாகும். உங்கள் தாயின் இந்த நிலை நிரந்தரமானது மற்றும் நீங்கள் அதில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் எனில், உங்கள் தாயை கவனித்துக்கொள்ள ஒரு நபரை நியமியுங்கள். உங்கள் பொருளாதார சூழ்நிலை அதற்கு ஏற்றது இல்லையென்றால், அவரை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். எந்தத் தவறும் செய்யாத உங்கள் தாயை, உங்களுடைய திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பொறுப்பாக்காதீர்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


Next Story