இப்படிக்கு தேவதை
பிறருக்கு உதவும் உங்களின் நற்பண்புகள் பாராட்டத்தக்கவை. ஆனால், உங்கள் பிள்ளைகள் ஏன் உதவ வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்ப தையும் யோசிக்க வேண்டும்.
1. நான் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். என் பிள்ளைகளோ மற்றவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துமாறு கூறுகின்றனர். 'எல்லோரும் உங்களை ஏமாற்று
கின்றனர். யாரும் நல்லவர்கள் இல்லை' என்று சொல்கிறார்கள். நான் என் பிள்ளைகளின் பேச்சை கேட்பதா? அல்லது என் மனம் சொல்லும்படி நடந்து கொள்வதா? என்று தெரியாமல் குழம்பு
கிறேன். எனக்கு தீர்வு சொல்லுங்கள்.
பிறருக்கு உதவும் உங்களின் நற்பண்புகள் பாராட்டத்தக்கவை. ஆனால், உங்கள் பிள்ளைகள் ஏன் உதவ வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்ப தையும் யோசிக்க வேண்டும். உங்கள் உதவியை நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மதிக்காத சம்பவங்கள் நடந்துள்ளதா? உங்களது உதவி தேவையில்லாத போதும் பிறருக்கு உதவுகிறீர்களா? ஒருவருக்கு தேவை இருக்கும்போது மட்டுமே, நாம் உதவி செய்ய வேண்டும்.
நீங்கள் உதவி செய்யும் நபர்கள், உங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவுவதற்கான உங்கள் முயற்சியில், நீங்கள் அவர்களை சோம்பேறிகளாக ஆக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எதிர்மறையாக நடப்பதை உங்கள் பிள்ளைகள் கவனித்திருக்கலாம். அதனால் உங்களை அவர்கள் எச்சரித்திருக்கலாம். நீங்கள் மற்றவர்களுக்கு அதிகமாக உதவுவதால், உங்கள் பிள்ளைகளுக்கு தேவைப்படும் போது அவர்களுக்கு உதவி கிடைக்காமல் இருக்கலாம்.
உங்கள் பிள்ளைகளின் அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். தேவையின்போது செய்யப்படும் உதவியே சிறந்தது என்பதை மனதில் நிறுத்துங்கள். தேவையற்ற இடங்களில் உதவி செய்து, உங்களை உடல் மற்றும் மன ரீதியில் அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள்.
2. ஒரு ஆண் அதிக நம்பிக்கை கொடுத்து பிறகு விலகிச் சென்றதால், மற்ற ஆண்களிடம் பேசுவதற்கு கூட மனம் ஒத்துழைக்க மறுக்கிறது. யாரையும் நம்ப முடியவில்லை. என் எண்ணத்தை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஆழ்ந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறீர்கள். அந்த உறவு ஏற்படுத்திய உணர்ச்சிக் காயத்திலிருந்து நீங்கள் குணமடையவில்லை. பகுத்தறிந்து பார்க்கும் நிலையில் இல்லாமல், உணர்ச்சிவசமான நிலையில் இருக்கிறீர்கள். முந்தைய உறவில், உண்மையில் என்ன தவறு நடந்தது என்பதை யோசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்களை மாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். இந்த மாற்றம், உங்களுக்கு பொருத்தமான மற்றொரு உறவை தேர்ந்தெடுக்க உதவும்.
ஏனெனில், உறவில் உங்கள் தேவைகள் தெளிவாக இருக்கும்போது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற் கான உங்கள் முடிவும் தெளிவாக இருக்கும். பகுத்தறிந்து பார்க்கும் நிலையும், உணர்ச்சிப் பூர்வமான நிலையும் சேர்ந்திருக்கும், ஆரோக்கியமான மனநிலையில் தான் உறவைப் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
புதிய தொடக்கத்தை தேடுவதற்கு முன்பு, மனதை அமைதியான நிலைக்கு கொண்டு வாருங்கள். உங்கள் மனதுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுங்கள். திடமான மனநிலையில் இருக்கும்போது, உங்களுக்கு தகுதியான துணையை சந்தித்தால், உங்கள் வாழ்க்கை பற்றிய முடிவை எடுங்கள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.