இப்படிக்கு தேவதை
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. நான் திருமணமாகி மாமனார், மாமியார் மற்றும் கணவரின் உடன் பிறந்தவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறேன். கணவரின் இளைய சகோதரி கடைக்குட்டி என்பதால், வீட்டில் உள்ள அனைவரும் அவள் மீது அதிக பாசம் வைத்திருந்தனர். ஆனால், அவள் கல்லூரி செல்லும் வழியில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டை விட்டு சென்று விட்டாள். இதனால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. தற்போது கணவரின் சகோதரியை திருமணம் செய்தவன் தீய பழக்கம் கொண்டவன் என்பதும், அவள் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. ஆனால், எனது குடும்பத்தினர் அவளுக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. கணவன் சரியில்லாத நிலையில், கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை தனியாக தவிக்க விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த நிலையில் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. தங்கள் ஆலோசனையை வேண்டுகிறேன்.
குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அவளுக்கு உதவி செய்ய விரும்பவில்லை எனும்போது, நீங்கள் உதவுவதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவளுடைய கணவர் ஒழுக்கமான நபர் இல்லை எனும்போது, உங்கள் உதவியை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் உங்கள் கணவரின் தங்கையிடம் பேசுங்கள். கணவர் தீயவன் என்று தெரிந்த பின்பு அவளுடைய திருமண வாழ்க்கையில், அவளின் நிலைப்பாடு என்ன என்பதை அறியுங்கள். அவளுக்கு உண்மையிலேயே உங்கள் உதவி தேவைப்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சம்பந்தப்பட்ட நபருக்கு உதவி தேவைப்படாமல் நாமாக செய்யும் உதவிக்கு, சில நேரங்களில் மதிப்பு இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் தெளிவாக சிந்தித்து முடிவு செய்யுங்கள். அவளுக்கு உதவுவதற்கான உங்கள் நல்ல எண்ணம் உங்களை சரியான திசையில் அழைத்துச் செல்லும்.
2. எனக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கர்ப்பம் தரிப்பதற்காக தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். இந்த நிலையில், கணவரின் சகோதரருக்கு சென்ற வருடம் திருமணம் நடந்தது. அவரின் மனைவியும், நானும் நல்ல முறையில் பழகி வருகிறோம். சமீபத்தில் அவர் கர்ப்பமடைந்தார். அதன் பிறகு எனது மாமியார் என்னை பார்க்கும்போதெல்லாம் சிடுசிடுப்புகள், குழந்தை இல்லாததைப் பற்றிய ஒளிவு மறைவான பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. கணவரின் ஆதரவு இருந்தாலும், இந்த புதிய சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்று புரியவில்லை. எனக்கு வழி காட்டுங்கள்.
நமது சமுதாயம் இன்னும் முற்போக்காக சிந்திக்க வேண்டிய விஷயங்களில் பெண்கள் கருத்தரிக்க இயலாமையும் ஒன்று. உங்கள் கணவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள். கணவரின் சகோதரருடைய மனைவியுடன் ஆரோக்கியமான உறவைத் தொடருங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். உங்கள் மாமியாரின் செயல்களுக்கு நீங்கள் எதிர்வினையாற்றத் தொடங்கினால், உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும். அதன்காரணமாக நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் வீணாகும். எனவே உங்களைச் சுற்றி இருக்கும் நேர்மறையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். சரியான நேரத்தில் உங்களுக்குத் தகுதியானதைப் பெறுவீர்கள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.