இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 7 Aug 2022 7:00 AM IST (Updated: 7 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. நான் வீட்டிலேயே இருந்து வேலை பார்த்து வருகிறேன். அலுவலக வேலைகளோடு, குடும்ப பொறுப்புகள், வயதான மாமனார், மாமியார், கைக்குழந்தை இவர்களையும் கவனித்து வருகிறேன். எங்களது குடியிருப்பில் இருக்கும் சக பெண்கள் ஆரம்பத்தில் அடிக்கடி வந்து பொழுதுபோக்காக பேசினார்கள். தொடக்கத்தில் நட்பை வளர்ப்பதற்கு அதுதான் வழி என்று அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். நாளடைவில் எனது வேலை நேரத்தை பாதிப்பதையும் அறியாமல், சம்பந்தமில்லாத விஷயங்களையும், அவரவர் குடும்ப விஷயங்களையும் பேசி வருகிறார்கள். இதனால் எனது அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. இத்தகைய பெண்களை எவ்வாறு தவிர்ப்பது? இவர்களைத் தவிர்த்தால் ஏதேனும் அவசர உதவிக்கு சக மனிதர்கள் துணைக்கு என்ன செய்வது? என்று தெரியவில்லை.

நீங்கள் கூறியுள்ளபடி, குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, உங்கள் நேரம் விலைமதிப்பற்றது. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசி நேரத்தை வீணடிக்கும் நபர்களிடம், 'அவர்களுடைய உரையாடல்களில் பங்கேற்கும் நிலையில் நீங்கள் இல்லை' என்பதை பொறுமையோடும், உறுதியோடும் சொல்லுங்கள். அத்தகைய உரையாடல்கள் நடைபெறும் இடத்தில் இருந்து விலகிச் செல்லுங்கள். ஒரு நாளில் குறிப்பிட்ட சில நிமிடங்களை அவர்களுக்காக ஒதுக்குங்கள். அவசர உதவிகள் தேவைப்படும்போது நீங்கள் நிச்சயம் உதவுவீர்கள் என்பதை, அவர்களுக்கு புரிய வையுங்கள். உங்களுக்கான எல்லைகளை நிர்ணயிப்பதில் தெளிவாக இருங்கள். 'இல்லை' என்று சொல்ல வேண்டிய இடத்தில், 'இல்லை' என்று சொல்வதற்கு தயங்காதீர்கள்.

2. நான் ஒருவரை காதலித்து வந்தேன். எனது காதலை வீட்டில் தெரிவித்தபோது பெற்றோர் எதிர்த்தனர். அதன் பிறகு அவர்கள் என்னிடம் நடந்துகொள்ளும் நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டது. என்னை வெளியில் எங்கும் செல்ல விடுவதில்லை. தினமும் ஏதாவது பேசி காயப்படுத்துகிறார்கள். அவர்களின் கோபம் நியாயமானது என்று அறிவேன். இருந்தாலும் தனிமை, எதிர்மறை எண்ணங்கள், வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பது போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரித்தது. அதனால் தற்போது அடிக்கடி உடல் ரீதியாக ஆரோக்கிய கோளாறுகளால் சிரமப்படுகிறேன். வீட்டை விட்டு வெளியில் செல்லவும் எனக்கு வழியில்லை. இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு வழிகாட்டுங்கள்.

நீங்கள் உங்கள் வயதையும், உங்கள் காதலை பெற்றோர் எதிர்ப்பதற்கான காரணத்தையும் குறிப்பிடவில்லை. உங்கள் பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் கருத்துக்கு நீங்கள் மரியாதை கொடுப்பவர் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். அவர்களின் சம்மதம் இல்லாமல் நீங்களும், உங்கள் காதலரும் எந்த முடிவும் எடுக்க மாட்டீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். அவர்கள் ஏன் உங்கள் காதலை எதிர்க்கிறார்கள் என்பதை பகுத்தறிவோடு ஆலோசனை செய்யுங்கள். அவசரமில்லாமல் நிதானத்தோடு சிந்தியுங்கள்.

நீங்கள் எடுக்கும் முடிவும், அதனால் ஏற்படும் விளைவுகளும் உங்களை மட்டுமே பாதிக்கும். எனவே நீங்கள் காதலிக்கும் நபரின் குணநலன்களை ஆராயுங்கள். இந்த நபரை நீங்கள் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையை எவ்வாறு வாழ்வீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனம் அமைதியாக இருந்தால், நீங்கள் தெளிவாக முடிவு செய்ய முடியும். அதை நோக்கி செயல்படுங்கள். எல்லாம் நல்லபடியாக முடிவடையும்.

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.இந்த


டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story