இப்படிக்கு தேவதை
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. நான் கல்லூரியில் படித்து வருகிறேன். எனது தங்கை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். எங்கள் பெற்றோர் எங்களைப் பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. நான் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறேன். சில மாதங்களாக எனது தங்கை எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள். நான் கண்டித்தாலும் அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை. படிப்பில் கவனம் செலுத்து வதில்லை அவள் காதலிக்கும் நபருக்கு குடி, புகைப்பழக்கம் எல்லாம் இருக்கிறது. அவளை இதில் இருந்து எப்படி மீட்டுக்கொண்டு வருவது என்று தெரியவில்லை. பெற்றோரிடம் இதைப் பற்றி பேசினால் அவர்கள் பிரச்சினை செய்து நிலைமையை விபரீதமாக்கி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு வழிகாட்டுங்கள்.
உங்கள் சகோதரியின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள காதல், அவளது வயதில் இருக்கும் எல்லோருக்கும் ஏற்படுவதுதான். இந்த வயதில் காதல் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். உங்கள் வீட்டிலும் உணர்வுப் பூர்வமான அன்பு இல்லாத சூழல் இருப்பதால், அவளது மனம் வெளியே அந்த அன்பைத் தேடுகிறது. இது நாளடைவில் மாறி விடும். இருப்பினும் அவள் காதலிப்பதாக சொல்லும் நபர் நல்ல குணங்களை கொண்டவர் இல்லை என்பதால், இந்த விஷயத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். இதில் நீங்கள் உங்கள் சகோதரியிடம் பேசுவதால் எதுவும் நடக்கப்போவது இல்லை. எனவே உங்கள் பெற்றோரிடம் இதுபற்றி பேசுவதே சிறந்தது. வீட்டில் சிறந்த சூழல் இல்லாதபோது, இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதை அவர்களிடம் வெளிப்படையாக சொல்லுங்கள். உங்கள் தங்கை காதலிக்கும் நபரைச் சார்ந்த பெரியவர்களிடம் இதுபற்றி பேசமுடிந்தால், அவர்கள் மூலம் இதற்கு தீர்வு காண முயற்சிக்கலாம்.
2. எனக்குத் திருமணம் நடந்து 12 வருடங்கள் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று எனது புகுந்த வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள். எனது கணவரும் அடிக்கடி இதைக் காரணம் காட்டி சண்டை போடுகிறார். இந்த நிலையில் நான் என்ன செய்வது?
உங்கள் மாமனார் மற்றும் மாமியார் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதுகுறித்து நீங்கள் கொடுக்கும் எந்த விளக்கத்தையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், அவர்கள் சொல்வதுபோல நீங்கள் ஆண் குழந்தை வேண்டும் என்று, அடுத்த குழந்தையைப் பெற்றுக்கொள்ள நினைத்தீர்கள் என்றால், பிறக்கப்போகும் குழந்தை ஆணாகத்தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு பெரிய சவாலாக உள்ளது. உங்களது இரண்டு பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மற்றும் திறன்களையும், மதிப்புகளையும் கொடுத்து வளர்ப்பதே பெரிய விஷயமாக இருக்கும். இதில் 3-வதாக ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது எல்லா விதத்திலும் உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஆண் குழந்தைக்காக நச்சரிப்பவர்கள் காலப்போக்கில் மறைந்துவிடுவார்கள். ஆனால், குழந்தையை பெற்று வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சார்ந்து இருக்கும். எனவே இதுகுறித்து உங்கள் கணவரிடம் தெளிவாக பேசுங்கள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை-இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.