இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 11 Dec 2022 7:00 AM IST (Updated: 11 Dec 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. சிறு வயதில் இருந்தே உறவினர்களால் நிராகரிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும் வளர்ந்தேன். திருமணத்துக்குப் பிறகு கணவரின் உறவுகள் ஆதரவாக இருப்பார்கள் என்று நினைத்தேன். அவர்களிடமும் அதே குணங்களை மட்டுமே காண முடிந்தது. எனவே உறவினர்களுடன் பழகுவதைத் தவிர்க்கிறேன். இதனால் எனக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வருகிறது. எங்கள் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகிறது. எனக்கு நல்வழி காட்டுங்கள்.

பாதுகாப்பான மற்றும் ஆதரவான குழந்தைப் பருவத்தை ஒருவர் அனுபவிக்கவில்லை என்றால், வளர்ந்த பிறகு தனிமை பற்றிய அச்சம் அதிகமாக இருக்கும். மேலும் வாழ்க்கையில் உறவுகளிடம் பாதுகாப்பான பிணைப்பை உணராதபோது, மற்றவர்களையும் நல்லவர் அல்லது கெட்டவர் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பார்கள். இதற்கு இடையில் அவர்களது மற்ற குணங்களை பார்க்க மாட்டார்கள். இவ்வாறே அவர்களது சிந்தனை பழக்கப்பட்டிருக்கும். இத்தகைய நிலையில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்.

ஆனால், உங்கள் மூளையை மீண்டும் பயிற்றுவிக்க உங்களால் முடியும். உங்கள் கணவரின் உறவினர்களுடன் நல்ல உறவை உருவாக்க முடியும். இல்லையென்றால் உங்களைப் பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளும், இதே மனநிலையுடன் வளருவார்கள். உங்கள் இளமைக் காலத்தில் நடந்தவற்றை ஒதுக்கி விடுங்கள். உறவினர்களுடன் நல்ல அனுபவங்களை உருவாக்குங்கள். அதன் மூலம் உங்கள் திருமண வாழ்க்கை இனிமையானதாக மாறும்.

2. எனது அண்ணனின் முதல் மனைவி திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே விபத்தில் சிக்கி இறந்தார். அவருக்கு குழந்தை இல்லை. பிறகு அண்ணனுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் பிறந்தனர். மகளுக்கு தற்போது 10 வயது. அவள் இறந்து போன முதல் மனைவியின் சாயலில் இருக்கிறாள். இதனால் இரண்டாவது மனைவி, மகளிடம் எப்போதும் வெறுப்பைக் காட்டுகிறார். எனவே கணவன்-மனைவி இடையே பல நேரங்களில் கருத்து வேறுபாடு உண்டாகிறது. குடும்பத்தினர் தலையிட்டு சமாதானம் செய்தாலும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்க்க வழி சொல்லுங்கள்.

மரபணு ரீதியாக இந்தக் குழந்தை முதல் மனைவியைப் போல் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இறந்து போன முதல் மனைவி, கணவனுக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று குடும்ப உறவுகள் எதிர்பார்ப்பது உண்டு. இந்த வலுவான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் அவர்களது பேச்சுகளிலும், உரையாடல்களிலும் வெளிப்படும். இவை இரண்டாவது மனைவியின் மனதை வெகுவாக பாதித்திருக்கும். இதனால் அவர் பாதுகாப்பின்மையை உணர ஆரம்பித்திருப்பார். முதல் மனைவியின் இருப்பை எந்த விதத்திலும் தன் மகளின் வடிவத்தில் உணர விரும்பியிருக்க மாட்டார்.

நாம் சொல்வதை அப்படியே நம்பும் திறன் நமது மூளைக்கு உண்டு. எனவே என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். இரண்டாவது மனைவியின் எதிரே பேசும்போது, 'அவரது மகள் மரபணு ரீதியாக முதல் மனைவியைப் போல இருப்பதற்கு சாத்தியமில்லை' என்பதை தொடர்ந்து சொல்லுங்கள். இதை அவர் தெளிவாக உணர்ந்த பின்பு பாதுகாப்பற்ற உணர்வில் இருந்து வெளிவருவார். அவ்வாறு நடக்கும்போது அவரிடம் மாற்றங்களும் மெதுவாக உண்டாகும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story