இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 15 Jan 2023 1:30 AM GMT (Updated: 15 Jan 2023 1:30 AM GMT)

குழந்தைகள், உலகம் அளிக்கும் போராட்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு நல்ல முறையில் வளர வேண்டும்.

1. ன் சகோதரி, மாமியார் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாள். அவளது இரண்டு குழந்தைகளும் தந்தையுடன் இருக்க பயந்து, எங்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். ஆரம்பத்தில் அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். இப்போது எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சகோதரியின் குழந்தைகளையும் சேர்த்து வளர்க்க முடியாத சூழலில் இருக்கிறோம். இந்த நிலையில் அவர்களின் தந்தை குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறும், அவர்களை நல்லபடியாக வளர்ப்பதாகவும் கூறினார். ஆனால், குழந்தைகள் அவரிடம் செல்வதற்கு தயாராக இல்லை. நாங்கள், என்ன முடிவு செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம். ஆலோசனை கூறவும்.

சகோதரியின் குழந்தைகள் மீது உண்டான இரக்கத்தால், அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்திருக்கிறீர்கள். அதனால் இப்போது அவர்களை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் உங்களுக்கு கடினமானதாக இருக்கிறது. மேலும் பொருளாதார ரீதியிலும் சிரமத்தை சந்தித்து வருகிறீர்கள். சகோதரியின் குழந்தைகள் உங்கள் வீட்டில் பாதுகாப்பையும், சவுகரியத்தையும் உணர்வதால், அதில் இருந்து வெளிவந்து தங்கள் தந்தையுடன் செல்வதற்கு விரும்பவில்லை என்று தெரிகிறது.

ஆனால் அவர்கள், உலகம் அளிக்கும் போராட்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு நல்ல முறையில் வளர வேண்டும். தங்கள் தாயின் இழப்பை ஏற்றுக்கொண்டு, உளவியல் ரீதியில் வலுவானவர்களாக மாற வேண்டும். அவர்களின் தந்தை தனது ஆதரவை வழங்கத் தயாராக இருக்கும்போது, அவருடன் குழந்தைகளை அனுப்புவதற்கு நீங்கள் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சொல்வதில் இருந்து, உங்கள் சகோதரியின் மறைவுக்குப் பிறகு அவரது கணவர் மற்றொரு திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. வாழ்க்கையை விட்ட இடத்தில் இருந்து மீண்டும் கட்டமைக்க விரும்புகிறார். அவர் தனது குழந்தைகளுடன் இருக்க தகுதியானவர். அவர்களை அவருடன் அனுப்பி, அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வதைப் பாருங்கள்.

2. நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். சிறு வயதில் இருந்தே நண்பர்கள், உறவினர்கள் சொல்லும் பேய்க்கதைகளை ஆர்வத்துடன் கேட்பேன். அவற்றை நினைத்து பயந்து இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பேன். சமீபகாலமாக எனக்குள் பயம் அதிகமாக இருக்கிறது. பல நாட்கள் இரவில் தூங்குவதே இல்லை. இதில் இருந்து விடுபட வழி கூறுங்கள்.

நீங்கள் கேட்கும் திகில் கதைகள், உங்கள் ஆழ் மனதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் தான் உங்கள் தூக்கம் பாதிக்கிறது. திகில் கதைகளைக் கேட்பதை உடனே நிறுத்துங்கள். தூங்குவதற்கு முன்பு தியானம் செய்யுங்கள். நேர்மறையான அல்லது நகைச்சுவையான புத்தகங்களைப் படியுங்கள். இவை திகில் எண்ணங்களுக்கு மாற்றாக இருக்கும். அதன் பிறகும் உங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டால், மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story