இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 5 Feb 2023 1:30 AM GMT (Updated: 5 Feb 2023 1:30 AM GMT)

எல்லா நேரத்திலும் மற்றவர் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள். உங்களுக்காக எழுந்து நில்லுங்கள். தயக்கம் கொள்ளாதீர்கள்.

நான் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவள். என்னுடைய மூத்த தம்பி தான் குடும்ப பொறுப்புகளை கவனித்து வருகிறான். நான் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து சம்பாதித்து வந்தேன். என் அம்மாவும், தம்பியும் அதற்கு இடையூறு செய்தனர். என்னால் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று, நானே அதை நிறுத்திவிட்டேன். இந்த நிலையில் உறவுக்கார வாலிபர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்வதற்கு பெண் கேட்டு வந்தார். என் தம்பி அதையும் நிராகரித்து விட்டான். இது நடந்து 3 வருடங்களுக்கு பிறகு, சமீபத்தில் ஒரு நாள் என் அம்மா என்னிடம் வந்து "நீ வீட்டை விட்டு வெளியேறி உறவுக்கார வாலிபரை திருமணம் செய்து கொள்" என்று கூறினார். இப்படி ஒரு சூழ்நிலையில், நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் முடிவுகளால், தன்னுடைய வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில், உங்கள் சகோதரர் தெளிவாக இருப்பது நீங்கள் கூறியதில் இருந்து தெரிகிறது. உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த உறவுக்கார வாலிபரை அணுகி, உங்கள் தரப்பு சூழ்நிலையை விளக்குங்கள். அவருடனான வாழ்க்கை சிறந்ததாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றினால், அடுத்த கட்ட செயல்பாட்டை நோக்கிச் செல்லுங்கள். கடந்த காலத்தை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கும் நேரம் இது. நீங்கள் எப்போதும் எல்லோரையும் மகிழ்விப்பவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கு தகுதியானவர்கள் தான். எல்லா நேரத்திலும் மற்றவர் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள். உங்களுக்காக எழுந்து நில்லுங்கள். தயக்கம் கொள்ளாதீர்கள்.

எனக்கு வயது 30. என்னுடன் கல்லூரியில் படித்தவரை 7 வருடங்களாக காதலித்து வருகிறேன். தனது அண்ணனுக்கு திருமணம் முடிந்த பின்பு, எங்கள் திருமணம் பற்றி பேசலாம் என்றார். அது நடந்த பின்னரும், அவரது வீட்டில் எங்கள் காதலைப் பற்றி சொல்லாமல் இருக்கிறார். அவரது சொந்த ஊருக்கு செல்லும்போது எல்லாம் என்னுடன் எந்த வழியிலும் தொடர்பு கொள்வதில்லை. எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் வருகிறது. இது எங்கள் உறவை பாதிக்கும் என்று எதுவும் பேசாமல் இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அவரை விட்டு விலகுமாறு தொடர்ந்து கூறி வருகின்றனர். இது குறித்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.

உங்கள் இருவருக்குமான உறவைப் பற்றி தன்னுடைய குடும்பத்தினருடன் அவரால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்பதில் இருந்தே, உங்கள் காதலில் அவருடைய அர்ப்பணிப்பு குறைவாக இருப்பது தெரிகிறது. நீங்கள் திருமண வயதைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது. அவரிடம் பேசி, இந்த உறவை எப்படி முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்களைப் பற்றி அவரது குடும்பத்தினரிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்த அவருக்கு நேரம் தேவைப்பட்டால், நீங்கள் காத்திருப்பதில் அர்த்தம் இருக்கிறது. அவ்வாறே இருந்தாலும், உங்கள் குடும்பத்தாரை சந்தித்து இதைப் பற்றி தெரிவிக்கும்படி அவரிடம் கேளுங்கள். உறவை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் கேள்வி கேட்பதை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்படுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story