இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 26 Feb 2023 1:30 AM GMT (Updated: 2023-02-26T07:01:05+05:30)

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. நான் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு 2 இளைய சகோதரிகள் இருக்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்பு எங்கள் தந்தை எங்களை விட்டு சென்று விட்டார். தாய், சிரமப்பட்டு எங்களை வளர்த்தார். 5 வருடங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவரை எங்கள் அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் தந்தைக்கு நிகராக அன்பு செலுத்தி, எங்களை படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எங்கள் தந்தை திரும்ப வந்து, தன்னோடு சேர்ந்து வாழுமாறு எங்களைக் கூப்பிட்டார். எங்கள் அம்மா அவரை நிராகரித்து விட்டார். ஆனால், என்னால் தந்தையை ஒதுக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையை கையாள்வதற்கு வழிகாட்டுங்கள்.

தன்னையும், பெண் குழந்தைகளையும் ஆதரவில்லாமல் தவிக்க விட்டுச்சென்ற கணவரை மீண்டும் உங்கள் தாயால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களைப் பெற்ற தந்தையை உங்களால் நிராகரிக்க முடியாது என்றாலும், தந்தையின் இடத்தில் இருந்து உங்களுக்கு துணை நிற்கும் மாற்றாந்தந்தையை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நீங்கள் துன்பத்தை அனுபவித்து வாழ்ந்த காலத்தில், உண்மையான தகப்பனாக உங்களைப் பெற்ற தந்தை தன்னுடைய கடமையை செய்யவில்லை. இப்போது அவர் திரும்பி வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்கிறார். மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் அவரை மன்னிக்கலாம். ஆனால் அவரை மீண்டும் ஏற்றுக்கொள்வது என்பது, உங்களையும், உங்கள் சகோதரிகளையும் தந்தைக்கு நிகராக அன்பு செலுத்தி ஆதரவளித்து வரும் நபரை இழிவுபடுத்துவதாகும். எனவே இதில் உணர்வுபூர்வமாக சிந்திக்காமல், புத்திசாலித்தனமாக முடிவு எடுங்கள்.

2. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட எங்களை, கணவர் வீட்டில் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை. சில நாட்களுக்கு முன்பு கணவருடைய உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டோம். அங்கு வந்திருந்த கணவரின் அம்மா, என்னை அனைவரின் முன்னிலையிலும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருந்தார். என் கணவரோ, அவரை தடுத்து நிறுத்தவில்லை. பொறுமை இழந்த நான் மாமியாரை அடித்து விட்டேன். எனது கணவர், 'தனது அம்மாவை அடித்ததற்காக உறவினர் முன்னிலையில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தினமும் பிரச்சினை செய்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.

அந்த சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்பட்ட மனக்காயம் மற்றும் அவமானத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எல்லை மீறி உங்கள் மாமியாரை நீங்கள் உடல்ரீதியாக தாக்குவது என்பது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் மாமியார் உங்களை தகாத வார்த்தைகளால் பேசும்போது உங்கள் கணவர் அவரைத் தடுத்திருக்க வேண்டும். அவர் அதை செய்யாதது தவறாகும். இந்த பிரச்சினையை நீங்கள் தனிமையில் பேசித் தீர்த்திருக்க வேண்டும். எல்லோருக்கும் முன்னிலையில் இதை கையாண்டது தவறு.

ஒரு வயதான பெண்ணை பொது இடத்தில் உடல்ரீதியாக தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்பது தவறல்ல. இருந்தாலும், உங்கள் மாமியார் உங்களை இழிவாக பேசியது தான் உங்களை அவ்வாறு நடக்கத் தூண்டியது. எனவே உறவினர் முன்னிலையில் உங்கள் மன்னிப்பையும், உங்களுடைய பக்கத்தில் இருக்கும் நியாயத்தையும் எடுத்துக்கூறுங்கள். உணர்ச்சிவசப்படாமல் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story