இப்படிக்கு தேவதை
நீங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள். வாழ்க்கை இதோடு முடிந்துவிடவில்லை. நல்ல விஷயங்களை எதிர்பார்த்து காத்திருங்கள்.
1. பெற்றோர் எனக்கு வரன் பார்த்து நிச்சயம் செய்திருந்தனர். திருமண நாள் நெருங்கிய நேரத்தில், மாப்பிள்ளை ஏற்கனவே வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிப்பதும், அதை மறைத்து அவசரமாக இந்த திருமண ஏற்பாடுகள் நடப்பதும் தெரிய வந்தது. என் தாயைத் தவிர, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் 'திருமணம் நடக்கட்டும். அதன்பிறகு எல்லா பிரச்சினையும் சரியாகி விடும்' என்றார்கள். ஆனால் நான் திருமணத்தை நிறுத்துமாறு கூறி, எனது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் நின்றுவிட்டது. இப்போது உறவினர்கள் எல்லோரும் என்னையே குற்றம் சுமத்தி பேசுகிறார்கள். நான் எடுத்த முடிவு சரி தான் என்று அவர்களுக்கு எப்படி புரியவைப்பது?
இந்த துணிச்சலான முடிவை எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். மணமகன் மற்றொரு பெண்ணை காதலித்தது தவறில்லை. ஆனால், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாததுதான் முற்றிலும் கவலைக்குரிய விஷயம். 'நீங்கள் எடுத்த முடிவு சரியானதுதான்' என்று, உங்கள் உறவினர்களுக்கு புரியவைப்பது என்பது சாத்தியமற்றது. ஏனென்றால், நீங்கள் செய்தது தவறு என்று அவர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள். அதனால் நீங்கள் சொல்வதை அவர்கள் காது கொடுத்து கேட்பார்களா என்பதே சந்தேகம்தான்.
இருப்பினும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பதை விட, நீங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள். வாழ்க்கை இதோடு முடிந்துவிடவில்லை. நல்ல விஷயங்களை எதிர்பார்த்து காத்திருங்கள். உங்களுக்கு தகுதியானதை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்று நம்புங்கள். வாழ்த்துக்கள்.
2. எனக்கு திருமணம் நடந்து 6 மாதம் ஆகிறது. நான் நகரத்து சூழலில் வளர்ந்தவள். எனது பெற்றோர், உறவு விட்டுப்போகக்கூடாது என்று கிராமத்தில் விவசாயம் செய்யும் அத்தை மகனுக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர். அதைத் தொடர்ந்து கிராமத்தில் குடியேறியபோது, அங்கிருக்கும் சூழ்நிலைக்கு பொருந்தி போவது கடினமாக இருக்கிறது. எனது அத்தை அவர் சொல்வதையெல்லாம் நான் செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறார். மாதவிலக்கு ஆகும் நேரத்தில், என் மொபைல் போனுக்குக்கூட மஞ்சள் தண்ணீர் தெளிக்கிறார். கணவரின் ஆதரவு எனக்கு இருந்தாலும், இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்.
புதிய சூழல் உங்களுக்கு கடினமாக இருப்பது புரிகிறது. திருமணமாகி 6 மாதங்களே ஆவதால், உங்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சுமூகமான உறவை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக, அவர்களிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். வேறுபாடுகளை அச்சுறுத்தல்களாகப் பார்க்காதீர்கள்.
இந்த கற்றல் அனுபவங்கள் உங்கள் கணவருக்கும், உங்களுக்குமான நெருக்கத்தையும், புரிதலையும் அதிகரிக்கும். சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். உதாரணத்துக்கு, உங்கள் கணவருக்கு அவரது கிராமத்துக்கு வெளியே வேலை கிடைத்தால், நீங்கள் அங்கு இருக்க வேண்டிய சூழல் வராது. எனவே உங்கள் கணவர் குடும்பத்துடனான உறவைக் கட்டி எழுப்புவதன் மூலம், நீங்கள் நீங்களாக இருக்க முடியும். மாற்றங்கள் உடனே நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு போதுமான நேரம் கொடுங்கள். உளவியல் ரீதியாக நீங்கள் அதிகமாக விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம், உங்கள் இருவரின் உறவு வலுப்படும். மற்றவையெல்லாம் அதன்பிறகு தானாக சரியாகும்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.