இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 19 March 2023 1:30 AM GMT (Updated: 2023-03-19T07:00:14+05:30)

நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவளுக்கு கற்றுக் கொடுங்கள். அவளுக்கு என்ன நடந்தாலும் அல்லது அவள் என்ன உணர்ந்தாலும் உங்களுடன் வந்து பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

1. என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய தாய் இறந்துவிட்டார். வயதான தந்தையை, கணவரின் அனுமதியுடன் எங்கள் வீட்டில் தங்க வைத்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் கணவரின் உறவினர்கள், என்னுடைய தந்தை என்னுடன் வசிப்பதை கேலி செய்து அவரது முன்பாகவே ஜாடை மாடையாக பேசினார்கள். பலமுறை பொறுமையாக இருந்த நான், ஒரு கட்டத்தில் அவர்களிடம் வாக்குவாதம் செய்துவிட்டேன். இதனால் எனக்கும், கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆணைப் போலவே பெண்ணும் தன்னுடைய வயதான பெற்றோரை பராமரிக்க வேண்டும் எனும் நிதர்சனத்தை, இவர்களுக்கெல்லாம் எவ்வாறு புரிய வைப்பது?

நீங்கள் மற்றவர்களுக்கு நிதர்சனத்தை புரிய வைக்க முயற்சிப்பதன் மூலம், சமூகத்தின் வலுவான ஆணாதிக்க அமைப்புக்கு எதிராக போராட முயற்சிக்கிறீர்கள். எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முதலில் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வயதான தந்தையை கவனித்துக்கொள்வதும், அதற்கு உங்கள் கணவரின் ஆதரவை பெறுவதும்தான் இப்போது உங்களுக்கு முக்கியமானது. உங்களுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும்போது

உறவுகள் பேசுவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களால் உங்களுக்கு எந்த உதவியும், ஆதரவும் கிடைக்காது. அவர்களுடன் சண்டையிடுவதன் மூலம், நீங்களே அவர்களை முக்கியத்துவம் பெற்றவர்களாக மாற்றிவிடாதீர்கள். உங்களுக்கு எது முக்கியம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் கணவரின் அன்பையும், ஆதரவையும் பெறுங்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

2. எனக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் செய்திகளை அடிக்கடி காண்கிறேன். பெரும்பாலும் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களே அவ்வாறு செய்வதால், என்னை அறியாமல் மனதில் ஒருவித பயம் ஏற்பட்டது. அதனால், என் மகளை எந்த ஆண்களிடமும் பழக விடுவது இல்லை. நெருங்கிய உறவினர்களிடம் கூட, எனது கண்காணிப்பின் கீழ் மட்டுமே பழக அனுமதிக்கிறேன். இதனால் எனக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. நான் செய்வது தவறு என்கிறார். என் மகளை எப்படி பாதுகாப்பது? ஆலோசனை கூறுங்கள்?

உங்கள் மகளுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில், நீங்கள் கவனமாக இருப்பது பாராட்டத்தக்கது. நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவளுக்கு கற்றுக் கொடுங்கள். அவளுக்கு என்ன நடந்தாலும் அல்லது அவள் என்ன உணர்ந்தாலும் உங்களுடன் வந்து பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். தேவையான இடங்களில், நீங்கள் அவளுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதையும் தெரியப்படுத்துங்கள். இதில் உங்கள் கணவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அப்போதுதான் நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள்? உங்கள் மகளுக்கு என்ன கற்பிக்கிறீர்கள்? என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும். உங்கள் கணவரையும் அவளிடம் இதே நம்பிக்கையை ஏற்படுத்த செய்யுங்கள். அவருடனும் அவள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளட்டும். தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பு அழகானது. அதற்கான கதவுகளைத் திறந்து விடுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story