இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 2 April 2023 1:30 AM GMT (Updated: 2 April 2023 1:30 AM GMT)

நிஜத்தையும், கற்பனையையும் நீங்கள் வேறுபடுத்தி பார்க்க வேண்டியது முக்கியமானது. அதேசமயம் இந்த கற்பனை, உங்கள் அன்றாட செயல்பாட்டை பாதிக்காதவரை பிரச்சினை இல்லை. உங்களுடைய பழைய நினைவுகள் மற்றும் உணர்வுகளில் இருந்து நீங்கள் வெளியே வராததால் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படுகின்றன.

1. னக்கு 38 வயது ஆகிறது. கணவர், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். இளம் வயதில் எனது நண்பரை ஒருதலையாக காதலித்தேன். அவர் மற்றொரு பெண்ணை விரும்புகிறார் என்று அறிந்ததும், எனது காதலை எனக்குள்ளேயே புதைத்து விட்டேன். ஆனால், இப்போது வரை இரவில் தூங்கும்போது அந்த நண்பருடன் நான் பேசுவது போலவும், அவர் எனது காதலை ஏற்றுக் கொண்டது போலவும் அடிக்கடி கனவு வருகிறது. அந்த நேரங்களில் எனக்குள்ளே பல குழப்பங்கள் தோன்றுகின்றன. குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருக்கும்போது, எனக்கு ஏன் இந்த நினைவுகள் உண்டாகின்றன? இதற்கு தீர்வு என்ன?

உங்கள் எண்ணங்கள் மூலம், நீங்கள் கனவில் ஒரு கற்பனை உலகிற்குள் நுழைகிறீர்கள். இதில் உங்களுடைய பிரச்சினை என்பது, கற்பனை செய்வது அல்ல. கற்பனை செய்வது பற்றிய உங்கள் குற்ற உணர்வு தான். நீங்கள் இத்தகைய குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு கற்பனையே தவிர உண்மையல்ல என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நிஜத்தையும், கற்பனையையும் நீங்கள் வேறுபடுத்தி பார்க்க வேண்டியது முக்கியமானது. அதேசமயம் இந்த கற்பனை, உங்கள் அன்றாட செயல்பாட்டை பாதிக்காதவரை பிரச்சினை இல்லை. உங்களுடைய பழைய நினைவுகள் மற்றும் உணர்வுகளில் இருந்து நீங்கள் வெளியே வராததால் தான் இத்தகைய எண்ணங்கள் ஏற்படுகின்றன.

இனி உங்களுக்கு அவ்வாறு கனவுகள் வந்தால், அடுத்த நாள் காலையில் எழுந்ததும், அந்தக் கனவை ஒரு தாளில் எழுதுங்கள். 'அந்தக் கனவு நிஜமல்ல, கற்பனை' என்று எழுதி அதைத் துண்டு துண்டாக கிழித்துப் போடுங்கள் அல்லது எரித்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் மனம் அந்த குற்ற உணர்வில் இருந்து வெளிவரும். குற்ற உணர்ச்சியுடன் வாழாமல், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழுங்கள்.

2. எனது சகோதரர் அல்லது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், குறைவான வேகத்தில் சென்றாலும் பயத்தில் என் மனம் பதறுகிறது. எதிரே வரும் வாகனம் எங்கள் மீது மோதி விடுமோ? என்று அளவுக்கு மீறி பயப்படுகிறேன். வீட்டில் இருக்கும்போது டி.வி. சத்தம் சிறிது அதிகமானால் கூட ஏதோ அச்சம் தோன்றுகிறது. கேஸ் அடுப்பு எரியும் போதும் இதேபோல பயப்படுகிறேன். எப்போதாவது சில நேரங்களில் தோன்றும் இதுபோன்ற பயங்களில் இருந்து, நான் மீள்வது எப்படி? என்று கூறுங்கள்.

எதிர்மறையான நிகழ்வுகள் நடந்துவிடுமோ என்று எதிர்பார்த்து அளவுக்கு அதிகமாக கற்பனை செய்து பதற்றம் அடைகிறீர்கள். இது எப்போதாவது நடந்தாலும், உங்கள் செயல்பாட்டை பாதிக்காமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம். அத்தகைய சமயங்களில், மனதை நேர்மறையானவற்றை நோக்கி திசைத்திருப்ப முயற்சி செய்யுங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை இது உங்களை அடிக்கடி பாதித்தால், நீங்கள் தொந்தரவாக உணர்ந்தால், மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் சில பரிசோதனைகள் செய்து, உங்களுக்குத் தேவையான சிகிச்சை அளிப்பார்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story