இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 16 April 2023 1:30 AM GMT (Updated: 16 April 2023 1:30 AM GMT)

மற்றவர்கள் உங்களை கட்டாயப் படுத்துவதற்காக உதவாமல், நீங்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே உதவி செய்யுங்கள். உதவி செய்யும் செயல்பாட்டில், உங்கள் எல்லைகளை மிகத் தெளிவாக வைத்திருங்கள்.

1. பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்த என்னை, என்னுடைய பாட்டிதான் வளர்த்து ஆளாக்கினார். எனது தந்தை, மனைவியை இழந்த சில மாதங்களிலேயே மற்றொரு பெண்ணை மணந்து கொண்டார். அந்த பெண் சில வருடங்களில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். மூன்றாவதாக ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்த சில மாதங்களிலேயே, அந்த பெண் அவரை விட்டு பிரிந்து விட்டார். ஒரு தந்தையாக எனக்கு அவர் எந்த கடமையையும் செய்தது இல்லை. ஆனால் இப்போது உடல்நலக் குறைவால் சிரமப்படும் அவரை, நான் பராமரிக்க வேண்டும் என்று அவரது உறவுகள் வற்புறுத்துகிறார்கள். இதில் எனக்கு விருப்பம் இல்லாததால், மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.

உங்கள் தந்தையிடம் உங்களுக்கு எந்தவிதமான பற்றும் இல்லை என்பதை உணர்ச்சிபூர்வமாக புரிந்துகொள்ள முடிகிறது. மனதில் இருக்கும் குழப்பங்களை ஒதுக்கி வைத்து, 'உங்களுக்கு அந்த நபர் யார்?' என்று உங்களை நீங்களே ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் மனதில் 'அவர் யாரும் இல்லை' என்ற பதில் தோன்றினால், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு உதவ நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டுக்கொள்ளுங்கள். வயதான நோயாளிக்கு உதவுவதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

அதே சமயம் மற்றவர்கள் உங்களை கட்டாயப் படுத்துவதற்காக உதவாமல், நீங்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே உதவி செய்யுங்கள். உதவி செய்யும் செயல்பாட்டில், உங்கள் எல்லைகளை மிகத் தெளிவாக வைத்திருங்கள். நீங்கள் அவருக்கு எவ்வாறு உதவ முடியும்? என்று யோசித்து செயல்படுங்கள்.

பணமாக உதவுவது, அவர் தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து கொடுப்பது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது என ஏதாவது ஒரு வகையில் உதவலாம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், உங்கள் மன அமைதிக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2. என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வயதான அம்மா என்னுடன் இருக்கிறார். சில வருடங்களாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. நான் என்னுடைய கணவருடன் இருப்பதை விரும்பாதவர் போலவே நடந்துகொள்கிறார். கணவரும் நானும் பேசினால் கூட அதற்கு இடையூறு செய்கிறார். இரவில் உங்களுடன் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கிறார். இதனால் கணவருக்கும், எனக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்.

உங்கள் தந்தையின் இறப்புக்கு பிறகான தனிமை உணர்வு, உங்களுடைய தாயின் மனநிலையை பாதித்திருக்கும். அவர் தனது வாழ்க்கையை ஆதரவில்லாததும், தேவையற்றதுமாக நினைத்துக்கொண்டு இருக்கலாம். அவர் மனதில் இருக்கும் பாதுகாப்பின்மை உணர்வுதான், அவரை நீங்கள் கூறிய மேற்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இத்தகைய சூழ்நிலை, பல பெண்களை இவ்வாறு நடந்துகொள்ள செய்கிறது. தனிமை உணர்வுகளில் மூழ்கிப்போகாமல், தங்களது நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவிட்டால் இத்தகைய பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உங்கள் தாய்க்கு உளவியல் ஆலோசனை வழங்குவது அவசியமானது. எனவே தகுந்த மனநல நிபுணரிடம் அவரை அழைத்துச் சென்று ஆலோசிக்கவும். அவரது வழிகாட்டுதலுடன் உங்கள் தாயின் மனநிலையை மாற்ற முடியும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story