இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 18 Jun 2023 1:30 AM GMT (Updated: 18 Jun 2023 1:30 AM GMT)

தம்பதிகள் பெற்றோர்களாக மாற விரும்பாத பட்சத்தில், குழந்தை வளர்ப்பு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விருப்பமில்லாத அவர்களை நீங்கள் வற்புறுத்தி குழந்தைப் பெற்றுக்கொள்ள செய்தால், அதன் விளைவு குழந்தையையும் பாதிக்கக்கூடும்.

1. னக்கு 2 மகன்கள். இருவரும் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். மூத்தவனுக்கு திருமணமாகி 8 வருடங்களும், இளையவனுக்கு திருமணமாகி 5 வருடங்களும் ஆகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை. இதுபற்றி கேட்கும்போதெல்லாம் மகன்களும், மருமகள்களும் தங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணமே இல்லை என்கிறார்கள். முதுமைப் பருவத்தில் பேரக் குழந்தைகளுக்காக நானும், எனது கணவரும் ஏங்குகிறோம். இதை எவ்வாறு எங்கள் பிள்ளைகளுக்கு புரிய வைப்பது?

இன்று பல வீடுகளில் வயதான பெற்றோருக்கும், இளைஞர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைதான் உங்கள் வாழ்விலும் நடக்கிறது. சமீப காலமாக பல திருமணமான இளைஞர்கள் பெற்றோராக மாறுவதற்கு தயங்குகிறார்கள். பெற்றோருக்குரிய பொறுப்புகள் அவர்களுக்கு அனைத்து வகையிலும் அழுத்தம் தரக்கூடியதாக தெரிவதே இதற்குக் காரணம். இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் கணவன்-மனைவி இருவருமே வேலை, தொழில் போன்றவற்றில் பரபரப்பாக இயங்குகிறார்கள். இதில் கர்ப்பம், பிரசவம் போன்றவற்றுக்காக அவர்களது வேலையில் இருந்து ஓய்வு எடுப்பது கடினமாகிறது. தம்பதிகள் பெற்றோர்களாக மாற விரும்பாத பட்சத்தில், குழந்தை வளர்ப்பு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விருப்பமில்லாத அவர்களை நீங்கள் வற்புறுத்தி குழந்தைப் பெற்றுக்கொள்ள செய்தால், அதன் விளைவு குழந்தையையும் பாதிக்கக்கூடும். எனவே உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடுங்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள்.

2. என்னுடைய கணவர், 'பெண்கள் பிறந்ததே ஆண்களுக்கு சேவை செய்வதற்குதான்' என்ற ரீதியில்தான் வீட்டில் நடந்துகொள்வார். அவருடைய தினசரி வேலைகளைக்கூட நான் தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் அன்றைய நாள் முழுவதும் எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு தொடர்ந்துகொண்டே இருக்கும். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். தற்போது 6-ம் வகுப்பு படிக்கும் அவனும், தனது தந்தையைப் போலவே நடந்துகொள்கிறான். தன்னுடைய சொந்த வேலைகளைக்கூட அவனால் செய்துகொள்ள முடியவில்லை. இப்படியே போனால் அவனும் வருங்காலத்தில் என் கணவரைப் போலவே மாறிவிடுவானோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

உங்கள் பயம் முற்றிலும் சரியானது. ஆண்-பெண் பாலின சமத்துவம் என்ற கருத்தை, உங்கள் மகனுக்கு புரியும் வகையில் கதைகளின் வடிவில் அவனுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளுங்கள். பாலின சமத்துவம் பற்றி அடிக்கடி உங்கள் மகனுடன் மனம் திறந்து விவாதியுங்கள். உங்கள் கணவரைப் பற்றி எந்த வகையிலும் உங்கள் மகனிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். உங்கள் மகன் பாலின சமத்துவத்தைக் கற்றுக் கொள்ளும்போது, அவனது தந்தை செய்வது சரியான செயல் அல்ல என்பதை அவன் புரிந்துகொள்வான். சொந்தமாக அவனுடைய வேலைகளைச் செய்யச் சொல்வதை விட, அதை உங்களுடன் சேர்ந்து ஒன்றாகச் செய்ய சொல்லுங்கள். இருவரும் இணைந்து செய்யும்போது, உங்களில் ஒரு சிறந்த துணையை அவனால் பார்க்க முடியும். இத்தகைய நேரங்களில் நீங்கள் இருவரும் பல விஷயங்களை விவாதிக்க முடியும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story