இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 25 Jun 2023 1:30 AM GMT (Updated: 25 Jun 2023 1:30 AM GMT)

மகிழ்ச்சியான வாழ்க்கையை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்து, ஆனால் மீண்டும் மீண்டும் அது துயரத்தில் முடிந்ததால் அவள் அடைந்த அதிர்ச்சியையும், துன்பத்தையும் நினைத்து பார்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இருந்து ஒருவர் மீண்டு வருவது என்பது எளிதானது அல்ல.

1. நான் பட்டதாரிப் பெண். எனக்கு மூத்த சகோதரி ஒருவர் மட்டும் இருக்கிறார். நாங்கள் இருவரும் திருமணமானவர்கள். 'ஆண் பிள்ளைகள் இல்லாத எங்கள் குடும்பத்துக்கு மகனாக இருப்பார்' என்று அத்தை வீட்டில் கூறியதை நம்பி, அவரது மகனுக்கு என்னை, என் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் என்னுடைய கணவரின் குடும்பத்தினர் திருமணத்துக்கு பின்பு, நான் வேலைக்குச் செல்வதைத் தடுத்தனர். தற்போது என் பெற்றோர் பொருளாதார ரீதியில் சிரமப்படும்போதும், என் கணவர் அவர்களுக்கு எந்த உதவியும் செய்வது இல்லை. எனது அக்கா மட்டும்தான் பெற்றோருக்கு உதவி வருகிறார். இதைப் பற்றி பேசினாலே என் கணவர் எரிச்சல் அடைகிறார். இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கணவர் அமைதியான மனநிலையில் இருக்கும் சமயத்தில், அவரிடம் இதுபற்றி வாக்குவாதம் செய்யாமல் அமைதியாகப் பேசுங்கள். அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு காரணம் என்ன? என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் பெற்றோர் நிதி நிர்வாகத்தில் பொறுப்பற்று இருக்கிறார்கள் அல்லது அதிகமாக செலவுகள் செய்கிறார்கள் என்று அவர் நினைக்கிறாரா? கடந்த காலத்தில் உங்கள் கணவரை அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் விதமாக உங்கள் பெற்றோர் ஏதேனும் பேசினார்களா? நடந்து கொண்டார்களா? என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்தக் கேள்விகளை நீங்கள் கேட்கும்போது, உங்கள் கணவர் அதை மறுத்துப் பேசலாம், வாக்குவாதம் செய்யலாம் அல்லது இந்த விவாதத்தில் இருந்து உங்களை திசைத்திருப்ப முயற்சிக்கலாம். எதுவாக இருந்தாலும் புத்திசாலித்தனமாக கையாளுங்கள். நீங்கள் இருவரும் இணைந்து இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாளலாம் என்று யோசியுங்கள்.

2. என்னுடைய மகளுக்கு இப்போது வயது 29. சிறுவயதில் இருந்து அவளுடன் பழகி வந்த என்னுடைய அண்ணன் மகனை, அவளுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அவன் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டான். இதனால் அவள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள். பிறகு தன்னுடன் பணிபுரிந்த சக ஊழியரை காதலித்து திருமணம் செய்தாள். அவள் கர்ப்பமாக இருக்கும்போது அவரும் ஒரு விபத்து மூலம் மரணமடைந்தார். சில நாட்களில் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக என்னுடைய கணவர் உயிரிழந்தார். இப்போது நானும், என் மகளும்தான் ஒன்றாக இருக்கிறோம். மறுமணம் செய்வதற்கு நல்ல வரன்கள் வந்தாலும், என் மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவளுடைய வருங்காலத்தை நினைத்து கவலைப்படுகிறேன். எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

உங்கள் மகள் விரும்பிய இரண்டு வாழ்க்கையும் வெற்றி பெறாதது துரதிருஷ்டவசமானது. வாழ்க்கையில் அவளுக்கென்று ஒரு துணை வேண்டும் என்ற எண்ணத்தால், அவளை மறுமணம் செய்துகொள்ளும்படி நீங்கள் கூறுவதை புரிந்துகொள்ள முடிகிறது. அதே சமயத்தில், மகிழ்ச்சியான வாழ்க்கையை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்து, ஆனால் மீண்டும் மீண்டும் அது துயரத்தில் முடிந்ததால் அவள் அடைந்த அதிர்ச்சியையும், துன்பத்தையும் நினைத்து பார்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இருந்து ஒருவர் மீண்டு வருவது என்பது எளிதானது அல்ல. இந்த நேரத்தில் உங்கள் மகளுக்கு நீங்கள் வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, அவளுடைய முடிவை மதிப்பதும், அவளது மனக்காயங்கள் ஆறுவதற்கு கால அவகாசம் கொடுப்பதும் தான். நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவது அவளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வதற்கும், தன் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும் அவளுக்கு உதவியாக இருங்கள். உங்களால் முடிந்தவரை அவளுக்கு ஆதரவு தரும் நல்ல துணையாய் இருங்கள். மற்றொரு திருமணத்துக்கு அவள் தயாராக இல்லாதபோது அவளை கட்டாயப்படுத்தாதீர்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story