லாபம் தரும் டெல்லி அப்பளம் தயாரிப்பு


லாபம் தரும் டெல்லி அப்பளம் தயாரிப்பு
x
தினத்தந்தி 16 April 2023 1:30 AM GMT (Updated: 16 April 2023 1:30 AM GMT)

உங்கள் தயாரிப்பு தனித்துவமாக தெரிய புதுமையாக யோசித்து செயல்பட வேண்டும். உதாரணமாக மணமக்களின் பெயரை அப்பளத்தில் பொரித்து தரலாம். அப்பள வகைகளில் வித்தியாசமான சுவைகளை அறிமுகப்படுத்தலாம்.

ண்காட்சிகளில் விற்பனை செய்யப்படும் பெரிய அளவிலான அப்பளத்தை குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இவ்வகை அப்பளங்களை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். வெயில் அதிகமாக இருக்கும் இந்த நாட்களில் அப்பளத்தை பக்குவமாக காயவைத்து எடுப்பதும் எளிதானது.

வெளியில் வேலைக்கு செல்ல முடியாத பெண்கள், வீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவதற்கு அப்பளத் தயாரிப்பு ஏற்றது. இதற்கு முன் அனுபவமோ, முதலீடோ தேவையில்லை. இதை சுயதொழிலாக மேற்கொண்டு சந்தைப்படுத்தலாம். இங்கு தரப்பட்டிருக்கும் செய்முறையின் படி சில முறை செய்து பார்த்தால் தயாரிப்பு நுணுக்கங்களை தெரிந்துகொள்ளலாம். தரமாகவும், சுத்தமாகவும் தயார் செய்வது முக்கியமானது. சந்தைப்படுத்த வேண்டும் எனில் உரிய சான்றிதழ் பெறுவது அவசியம். திருமண விழா ஏற்பாட்டாளர்கள், கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்கள் மற்றும் ஓட்டல் நிறுவனங்களிடம் மொத்த சப்ளைக்கான ஆர்டர்கள் எடுக்கலாம்.

உங்கள் தயாரிப்பு தனித்துவமாக தெரிய புதுமையாக யோசித்து செயல்பட வேண்டும். உதாரணமாக மணமக்களின் பெயரை அப்பளத்தில் பொரித்து தரலாம். அப்பள வகைகளில் வித்தியாசமான சுவைகளை அறிமுகப்படுத்தலாம். குழந்தைகள் மனம் கவரும் வண்ணங்கள் சேர்க்கலாம். அப்பளம் தனித்துவமாக இருந்தால், உங்கள் பிராண்ட் பிரபலமாகும்.

உங்கள் நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வாசி களுக்கு இலவச சாம்பிள்கள் அளிக்கலாம். மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளின் மூலம் சந்தைப்படுத்தலாம்.

அப்பளம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ

ஜவ்வரிசி - ¼ கிலோ

உப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை மூன்று முறை நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்னர் அதை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு பசைப்போல அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். அடுத்த நாள் காலையில் உப்பு சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும். மாவு அதிக தளர்வாகவோ, கெட்டியாகவோ இல்லாமல் ஆப்ப மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

விளிம்புகள் கொண்ட 5 அல்லது 6 தட்டுகளை ஈரமில்லாமல் துடைத்து வைக்கவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதற்குள் ஸ்டாண்டை வைக்கவும். பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

இப்போது விளிம்பு கொண்ட தட்டில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, எல்லா பக்கங்களிலும் மாவு பரவும்படியாக தட்டை மெதுவாகச் சுழற்றுங்கள். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் இருக்கும் ஸ்டாண்டின் மீது வைத்து விடுங்கள். இவ்வாறு ஒவ்வொரு தட்டிலும் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடவும்.

இவை ஒன்று அல்லது ஒன்றரை நிமிடங்களில் வெந்து விடும். இப்போது மூடியைத் திறந்து, தட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆற வையுங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு கத்தியால் மெதுவாக ஓரங்களை எடுத்துவிட்டால், அப்பளம் சுலபமாகத் தட்டில் இருந்து பிரியும்.

இவ்வாறு எல்லா அப்பளங்களையும் எடுத்து, பெரிய பிளாஸ்டிக் பேப்பரில் வரிசையாக போட்டு வெயிலில் காயவிடுங்கள். நன்றாகக் காய்ந்ததும் காற்று புகாத சுத்தமான டப்பாக்களில் பத்திரப்படுத்தினால் வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.

தேவைப்படும்போது எண்ணெய்யில் பொரித்து எடுங்கள். விரும்பினால் அப்பளம் மீது மிளகாய்த்தூள் மற்றும் உப்பு தூவி ருசிக்கலாம்.


Next Story