ஆந்திரா ஸ்பைசி கார்ன்


ஆந்திரா ஸ்பைசி கார்ன்
x
தினத்தந்தி 16 July 2023 1:30 AM GMT (Updated: 16 July 2023 1:31 AM GMT)

சுவையான ஆந்திரா ஸ்பைசி கார்ன், பாலக் கார்ன் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

ந்திரா ஸ்பைசி கார்ன்

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்

பூண்டு - 5

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்

கறுப்பு மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்

சில்லி பிளேக்ஸ் - ½ டீஸ்பூன்

வெங்காயத்தாள் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

ஸ்வீட் கார்னை முக்கால் பதத்துக்கு வேகவைத்து எடுக்கவும்.

அது சற்று ஆறியதும், அதனுடன் சோளமாவு, உப்பு, கறுப்பு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கலக்கவும். பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஸ்வீட் கார்ன் கலவையை உதிர்த்துப்போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு, பொரித்து வைத்திருக்கும் ஸ்வீட் கார்னை அதில் கொட்டி நன்றாகக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

பிறகு அந்தக் கலவையில் கறுப்பு மிளகுத்தூள், வெள்ளை மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அதன் மேல் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி அலங்கரிக்கவும். சூடான 'ஆந்திரா ஸ்பைசி கார்ன்' தயார்.

பாலக் கார்ன்

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 2 கப்

பசலைக்கீரை - 1 சிறிய கட்டு

எண்ணெய் அல்லது வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் - ¼ டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ¼ டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

மசாலாவுக்கு:

முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - ½ கப்

தக்காளி (பொடிதாக நறுக்கியது) - ½ கப்

இஞ்சி - 1 அங்குல துண்டு

பூண்டு - 4 பல்

உலர்ந்த பூசணி

விதை - 1 டீஸ்பூன்

(இவை அனைத்தையும் மிக்சியில் போட்டு பசைபோல அரைத்துக்கொள்ளவும்.)

செய்முறை:

ஸ்வீட் கார்னை தனியாக வேகவைத்து வடிகட்டவும்.

பசலைக்கீரையை சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடங்கள் கழித்து வெளியே எடுக்கவும். பின்னர் உடனே அதை குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுத்து பசைபோல அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் அல்லது வெண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் சீரகத்தைப் போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்பு அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பசலைக்கீரை விழுதை போட்டு வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.) பின்னர் அதில் ஸ்வீட் கார்னை சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். 'பாலக் கார்ன்' தயார்.


Next Story