ராகி சாக்லெட் மில்க் ஷேக்


ராகி சாக்லெட் மில்க் ஷேக்
x
தினத்தந்தி 7 May 2023 1:30 AM GMT (Updated: 7 May 2023 1:30 AM GMT)

சுவையான ராகி சாக்லெட் மில்க் ஷேக், மிக்ஸட் புரூட்ஸ் கஸ்டர்ட் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

ராகி சாக்லெட் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய கேழ்வரகு மாவு - 3 டீஸ்பூன்

பால் - 1 டம்ளர்

நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன்

கொக்கோ பவுடர் - ½ டீஸ்பூன்

பாதாம் - 5

முந்திரி - 1

செய்முறை:

பாதாமை சூடான தண்ணீரில் ஊற வைத்து தோலுரித்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். முளைகட்டிய கேழ்வரகு மாவு இல்லை என்றால், வழக்கமாக உபயோகிக்கும் கேழ்வரகு மாவையே பயன்படுத்துங்கள்.

அடி கனமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவைக் கொட்டி, அதில் அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். பின்னர் இந்தக் கரைசலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை விடாமல் கிளற வேண்டும். மாவு நன்றாக வெந்தவுடன் அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலக்கவும். அது கரைந்ததும் கொக்கோ பவுடரை சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும். இப்போது கேழ்வரகு மாவு கலவை 'களி' பதத்துக்கு வந்திருக்கும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து கலவையை ஆற வைக்கவும்.

பெரிய மிக்ஸி ஜாரில் பாதாமையும், முந்திரியையும் போட்டு தூளாகப் பொடித்துக்கொள்ளவும். பின்பு அதில் தயாரித்து வைத்திருக்கும் கேழ்வரகு கலவை மற்றும் அரை டம்ளர் பால் ஊற்றி நன்றாக அடிக்கவும். பின்னர் மீதம் இருக்கும் பாலையும் அதனுடன் கலந்து பரிமாறவும். சுவையும், ஊட்டச்சத்தும் நிறைந்த ராகி சாக்லேட் மில்க் ஷேக் தயார். இதன் மேலே பொடிதாக நறுக்கிய உலர் பழங்களை தூவி அலங்கரிக்கலாம். குளிர வைத்தும் பருகலாம்.

மிக்ஸட் புரூட்ஸ் கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர் (கொழுப்பு நீக்காதது)

துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், திராட்சை, மாம்பழம், ஆப்பிள், மாதுளை - தலா ½ கப்

கஸ்டர்ட் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

செர்ரிப்பழம் - 4

செய்முறை:

முதலில் அரை டம்ளர் பாலைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமிருக்கும் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். பால் கொதித்ததும் தீயை நன்றாகக் குறைத்து விடவும்.

இப்போது, தனியாக எடுத்து வைத்திருக்கும் பாலுடன், கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். இதை அடுப்பில் இருக்கும் பாலில் ஊற்றி 4 முதல் 5 நிமிடங்கள் வரை விடாமல் கிளற வேண்டும். இப்போது அடுப்பில் இருக்கும் பால் கெட்டியாகத் தொடங்கும். அதனுடன் சர்க்கரை சேர்த்து அது கரையும்வரை நன்றாகக் கலக்கவும். பிறகு அதை அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆறவைக்கவும். பாலின் மேல், பால் ஆடை உருவாகாதவாறு அவ்வப்போது கிளறி விடவும்.

பால் நன்றாக ஆறியதும், அதில் பழங்களை சேர்த்துக் கலந்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மூன்று மணி நேரத்தில் கஸ்டர்ட் நன்றாக செட் ஆகியிருக்கும்.

அதை வெளியில் எடுத்து பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, மேலே அலங் காரத்துக்காக செர்ரிப் பழங்களை வைக்கவும். நீங்கள் விரும்பினால் மெலிதாக நறுக்கிய பாதாம், பேரீச்சை ஆகியவற்றையும் மேலே தூவி அலங் கரிக்கலாம். இப்போது 'மிக்ஸட் புரூட்ஸ் கஸ்டர்ட்' தயார்.


Next Story