மீதமாகும் உணவால் பிறரின் பசி தீர்க்கும் தீஸ்மா


மீதமாகும் உணவால் பிறரின் பசி தீர்க்கும் தீஸ்மா
x
தினத்தந்தி 25 Sep 2022 1:30 AM GMT (Updated: 25 Sep 2022 1:31 AM GMT)

எங்களது செயல்பாட்டைப் பார்த்த சுற்றுவட்டார மக்கள், தங்கள் வீட்டு விசேஷங்களில் உணவு மீதமானால் எங்களுக்குத் தகவல் தருவார்கள். நாங்கள் அதை எடுத்துச் சென்று பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் சாலையோரம் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிப்போம்.

"எனக்குக் கிடைக்காத வாய்ப்புகளை, என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். இதுவே எனது லட்சியம்" என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தீஸ்மா.

வீட்டு விசேஷங்கள், திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளைப் பெற்று, அதை பசியால் வாடும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கும் சேவையை செய்து வருகிறார். கைவிடப்பட்டவர்களுக்கான இலவச முதியோர் இல்லத்தையும் நடத்திவரும் இவர், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சியையும் அளித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

"எனது பூர்வீகம் மண்ணூர். திருமணத்துக்குப் பிறகு பொள்ளாச்சியை அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருகிறேன். கணவர் கருப்புசாமி மர வேலைகள் செய்து வருகிறார். மகன் சத்தீஸ்வரனும், மகள் ரூபினேஸ்வரியும் படித்து வருகின்றனர்.

நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். வசதியில்லாததால் இலவச விடுதியில் தங்கிப் படித்தேன். படிப்பை முடித்தவுடனே திருமணமானது. சமையலில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் உணவகத் தொழிலை நடத்தி வருகிறேன். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சமைக்கும் உணவு மீதமாகும் சமயங்களில், அதை வீணாக்காமல் சாலையோர மக்களுக்குக் கொடுக்கத் தொடங்கினேன்.

அதன்பிறகு, உணவு மீதமாகாத நாட்களிலும் ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன். அதனால் அறக்கட்டளையைத் தொடங்கினேன். அதன்மூலம் பலரும் தங்களின் பிறந்த நாள், திருமண நாளுக்காக அளிக்கும் உணவுப் பொருட்களை சமைத்து ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகிறேன். விசேஷங்களில் மீதமாகும் உணவையும் பெற்றுக்கொண்டு ஆதரவற்றவர்களுக்கு அளித்து வருகிறேன்.

எங்களது செயல்பாட்டைப் பார்த்த சுற்றுவட்டார மக்கள், தங்கள் வீட்டு விசேஷங்களில் உணவு மீதமானால் எங்களுக்குத் தகவல் தருவார்கள். நாங்கள் அதை எடுத்துச் சென்று பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் சாலையோரம் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிப்போம்.

இதுதவிர, அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் வீடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். சுற்றியிருக்கும் மக்களின் ஒத்துழைப்போடு அவற்றை பராமரித்து வருகிறோம். இதுவரை 5,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம்.

பெண்கள் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவுகிறீர்கள்?

பெண்கள் சொந்த காலில் நிற்பது மட்டுமே அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் தரும். அதனால், சுய வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக, தொழில் மற்றும் திறன்வளர் பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறோம். தையல், அழகுக்கலை, மெகந்தி போடுதல், கணினிப் பயிற்சி போன்றவற்றை தொழில்முறை பயிற்சியாளர்கள் மூலம் வழங்குகிறோம்.

மேலும் பெண்களுக்கு சட்டம், பாலியல், ஆரோக்கியம், நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறோம்" என்ற தீஸ்மா, சாதனைப் பெண் விருது, பாரதியார் விருது, சேவக ரத்னா விருது, வெண்மைப் பணியாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


Next Story