சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்


சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்
x
தினத்தந்தி 26 Feb 2023 1:30 AM GMT (Updated: 26 Feb 2023 1:30 AM GMT)

பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

'மாய்ஸ்சுரைசர்' சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும். ஒரு சில மாய்ஸ்சுரைசர்களில் இருக்கும் ரசாயனக் கலவைகள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தேங்காய் எண்ணெய், தேன்:

தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தேன் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் முகப்பருக்களை குணமாக்கும்.

பயன்படுத்தும் முறை:

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

பாலாடை, வாழைப்பழம்:

காய்ச்சி ஆறவைத்த பாலில் இருந்து உருவாகும் 'பாலாடை' (பிரஷ் கிரீம்) சிறந்த மாய்ஸ்சுரைசிங் பண்புகளைக் கொண்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே பாலாடையை சரும பராமரிப்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதை வாழைப்பழத்துடன் கலந்து பயன்படுத்தும்போது, அதன் பலன் இரட்டிப்பாகும்.

பாலாடை மற்றும் வாழைப்பழம் சேர்ந்த கலவை சருமத்துக்கு ஈரப்பதத்தை மட்டுமில்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. கடுமையான குளிர் கால நாட்களில், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் இது உதவும்.

பயன்படுத்தும் முறை:

பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து, பிசைந்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பாலாடையை சேர்க்கவும். இதை மிருதுவான பசை போல கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து முகத்தை துடைக்கவும். வாழைப்பழத்தை சேர்க்க விரும்பாதவர்கள், பாலாடையை மட்டும் பயன்படுத்தலாம்.

பப்பாளி டோனர்:

பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவும். பப்பாளி, சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு பப்பாளிப் பழத்துண்டை பொடிதாக நறுக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்பு, பப்பாளி கூழை பஞ்சில் நனைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவவும்.

இவற்றை தவிர ஆலிவ் எண்ணெய், ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல், அவகேடோ பழம், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், வெள்ளரி காய், மோர், தயிர், விளக்கெண்ணெய், ரோஜாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பன்னீர் ஆகியவற்றையும் மாய்ஸ்சுரைசர்களாக உபயோகிக்கலாம்.


Next Story