முகப்பொலிவை அதிகரிக்கும் பெர்ரி பழங்கள்


முகப்பொலிவை அதிகரிக்கும் பெர்ரி பழங்கள்
x
தினத்தந்தி 24 Sep 2023 1:30 AM GMT (Updated: 24 Sep 2023 1:30 AM GMT)

பெர்ரி பழங்களில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளைப் போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கிரான்பெர்ரி என பல்வேறு வகைகளில் இருக்கும் பெர்ரி பழங்கள், உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளைப் போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். வீட்டிலேயே பெர்ரி பழங்கள் கொண்டு பேஸ்பேக் மற்றும் பேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம். அதை பற்றிய குறிப்புகள் இதோ...

பெர்ரி, தேன் பேஸ்பேக்:

முதலில் பெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அந்தக் கூழுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இது சருமத்தை சுத்தம் செய்து, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.

பெர்ரி, ரோஸ் வாட்டர் பேஸ்பேக்:

பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இந்த பேஸ்பேக், திறந்திருக்கும் சருமத் துளைகளை இறுகச் செய்து, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கும்.

பெர்ரி, எலுமிச்சை பேஸ்பேக்:

பெர்ரி பழக்கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பசைபோல தயாரிக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால், முகத்தில் இயற்கையான பொலிவு மற்றும் பளபளப்பு உண்டாகும்.

பெர்ரி, அரிசி மாவு பேஸ்பேக்:

பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு தயிர், அரிசி மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். இந்த பேஸ்பேக் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

பெர்ரி, ஓட்ஸ் பேஸ்பேக்:

பெர்ரி பழக்கூழுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் ½ டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். பின்பு அதை முகத்தில் தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

பெர்ரி, தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்:

பெர்ரி பழக்கூழுடன், ½ டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். இந்த ஸ்கிரப் முகப்பரு, வடுக்கள் மற்றும் கறைகளை விரைவாக அகற்ற உதவும்.


Next Story