குழந்தைகளுக்கு சரியான டயப்பரை தேர்வு செய்யுங்கள்


குழந்தைகளுக்கு சரியான டயப்பரை தேர்வு செய்யுங்கள்
x
தினத்தந்தி 30 July 2023 1:30 AM GMT (Updated: 30 July 2023 1:30 AM GMT)

உங்கள் குழந்தையின் உடல் எடையைப் பொறுத்து டயப்பரின் அளவு மாறுபடும். டயப்பர் அணியும்போது குழந்தைக்கு இறுக்கமாக இல்லாமல், சற்றே தளர்வாக இருக்க வேண்டும். இறுக்கமான டயப்பர்கள், குழந்தைகளின் சருமத்துக்கு செல்லும் காற்றோட்டத்தை தடை செய்து சரும பிரச்சினைகளை உண்டாக்கும்.

சிறு குழந்தைகள் அணிந்திருக்கும் துணியில் அடிக்கடி சிறுநீர், மலம் கழிப்பது இயல்பு. சில தலைமுறைகள் முன்பு வரை குழந்தைகளுக்கு மெல்லிய பருத்தி துணிகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது பலரும் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கின்றனர்.

பொருத்தமான டயப்பரை தேர்வு செய்யாவிட்டால், குழந்தையின் சருமத்தில் அரிப்பு ஏற்படுவது, சிவந்து போவது போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். டயப்பரை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை இங்கே...

தரம்: டயப்பரில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது, துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடியது என இரண்டு வகைகள் உண்டு. பெரும்பாலான தாய்மார்கள், ஒருமுறை பயன்படுத்தும் வகையிலான டயப்பரைத்தான் தேர்வு செய்கின்றனர். இத்தகைய டயப்பர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள துணி, பஞ்சு போன்றவற்றின் தரம் குறித்து ஆராய வேண்டும். ஈரத்தை உறிஞ்சுவதற்காக டயப்பரின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் திரவம் பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொண்ட பின்னரே அந்த டயப்பரை தேர்வு செய்ய வேண்டும்.

அளவு: உங்கள் குழந்தையின் உடல் எடையைப் பொறுத்து டயப்பரின் அளவு மாறுபடும். டயப்பர் அணியும்போது குழந்தைக்கு இறுக்கமாக இல்லாமல், சற்றே தளர்வாக இருக்க வேண்டும். இறுக்கமான டயப்பர்கள், குழந்தைகளின் சருமத்துக்கு செல்லும் காற்றோட்டத்தை தடை செய்து சரும பிரச்சினைகளை உண்டாக்கும்.

உறிஞ்சும் தன்மை: ஈரப்பதத்தை முழுவதுமாக உறிஞ்சி, குழந்தையின் சருமத்துக்கு உலர்வான தன்மையை கொடுப்பதே டயப்பரின் முக்கியமான வேலையாகும். குழந்தையின் சருமத்தை பாதிக்காத வகையில் டயப்பரின் தயாரிப்பு, அதில் பயன்படுத்தப்படும் துணி மற்றும் பஞ்சு ஆகியவை இருக்க வேண்டும். அவ்வப்போது குழந்தையின் சருமத்தில் புண், அரிப்பு, தழும்புகள், டயப்பரின் எலாஸ்டிக் பதியும் அடையாளங்கள் ஏற்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

சரும பாதுகாப்பு: டயப்பரை கழற்றியவுடன், ஒரு கப் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குழந்தையின் உடலில் டயப்பர் அணியும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதன்மூலம் ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

டயப்பர் அணிவிப்பதற்கு முன்னும், அதை கழற்றிய பின்னும் குழந்தையின் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். இது கிருமி தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

பயன்படுத்தும் முறை: 2 வயது வரை மட்டுமே குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்தலாம். நாள் முழுவதும் குழந்தைக்கு டயப்பர் அணிவிக்காமல், இரவு நேரங்களில் மட்டும் அணிவிக்கலாம். குறைந்தபட்சம் 4 மணி நேரம் வரை மட்டுமே ஒரு டயப்பரை அணிவிக்க வேண்டும்.


Next Story