அழகை அதிகரிக்கும் தாமரை எண்ணெய்


தினத்தந்தி 26 Jun 2022 1:30 AM GMT (Updated: 26 Jun 2022 1:30 AM GMT)

தாமரை எண்ணெய்யை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றும். சரும வறட்சியில் இருந்து காத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இந்த எண்ணெய்யை நகங்களின் மீது தடவி வந்தால் அவை உறுதியாகும்.

ரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான பொருட்களைக்கொண்டு பராமரிப்பது முக்கியம். இதற்கு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தாமரை எண்ணெய்.

தாமரையை நேரடியாகப் பயன்படுத்துவதை விட, எண்ணெய்யாகப் பயன்படுத்தும் போது, சருமத்தில் எளிதில் ஊடுருவும். இந்த எண்ணெய் தாமரை மலரை மட்டுமின்றி, விதைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சரும பராமரிப்புக்குத் தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. தாமரை எண்ணெய்யில் உள்ள ஒலிகோசாக்கரைடு, சரும செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது.

சருமத்தின் இளமைக்கு அவசியமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்க உதவும். சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இதனால், செல்கள் புத்துயிர் பெறும். முகப்பருக்கள் போன்ற பிரச்சினைகள் குறையும்.

தாமரை எண்ணெய்யை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றும். சரும வறட்சியில் இருந்து காத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இந்த எண்ணெய்யை நகங்களின் மீது தடவி வந்தால் அவை உறுதியாகும்.

தாமரை எண்ணெய்யில் உள்ள மூலக்கூறுகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும். மேலும், தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.

கூந்தல் எளிதில் உடையாத வகையில் நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாகவும் மாறும்.

தாமரையில், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். முகப்பரு தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.

தலை முடிக்கு இயற்கை சாயம்

ஒரு டம்ளர் தண்ணீரில், இரண்டு ஸ்பூன் பிளாக் டீ இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் தூள் உப்பு போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை ஆற வைக்கவும். தலைக்கு குளித்தவுடன் இதை முடியில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இது இயற்கையான தலைமுடி சாயமாக பயன்படும்.

சாக்லெட் லிப் பாம்

தேன்மெழுகு 2 டீஸ்பூன், கோகோ பவுடர் 1 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், பெப்பர்மிண்ட் எண்ணெய் சில துளிகள் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடுபடுத்தவும். அதை விட சிறிய பாத்திரத்தில் தேன்மெழுகைப் போட்டு சூடான தண்ணீரின் மேல் வைக்கவும். தேன்மெழுகு உருகியதும், அதில் கோகோ பவுடரைக் கொட்டி நன்றாகக் கலக்கவும். பின்பு பாதாம் எண்ணெய், பெப்பர்மிண்ட் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலந்து ஆற வைக்கவும். ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி பத்திரப்படுத்தவும். இதை தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையாகும்.


Next Story