நீச்சல் பயில்பவர்களுக்கான சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு


நீச்சல் பயில்பவர்களுக்கான சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு
x
தினத்தந்தி 10 July 2022 1:30 AM GMT (Updated: 10 July 2022 1:31 AM GMT)

வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும் சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் அவசியமானது. நீச்சல் குளங்களில் பயிற்சி எடுக்கும்போது, அதில் உள்ள தண்ணீருக்கு ஏற்றவாறு சன் ஸ்கிரீன் கிரீமை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீச்சல் பயிற்சி பெண்களுக்கு பல நன்மைகள் தரக்கூடியது. நீந்துவதன் மூலம் ஒரே நேரத்தில் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பயிற்சி பெறும். இதயம் மற்றும் நுரையீரல் சீராக இயங்குவது, உடல் சுறுசுறுப்பு அடைவது, தேவையற்ற கொழுப்பு கரைவது, உடல் தசைகள் உறுதி பெறுவது என நீச்சல் பயிற்சியினால் அடையக்கூடிய நன்மைகள் பல உண்டு. இருந்தாலும் நேரடியாக சூரிய வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களின் தாக்கம் இருக்கும் என்பதாலும், நீச்சல் குளத்தில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரின் சுகாதாரம் கருதியும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.

சரும பராமரிப்பு:

சன் ஸ்கிரீன்:

வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும் சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் அவசியமானது. நீச்சல் குளங்களில் பயிற்சி எடுக்கும்போது, அதில் உள்ள தண்ணீருக்கு ஏற்றவாறு சன் ஸ்கிரீன் கிரீமை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் திறந்தவெளி நீச்சல் குளங்களில் நீந்தும்போது சூரிய கதிர்களும், தண்ணீரில் இருக்கும் குளோரின் போன்ற ரசாயனங்களும் சருமத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சரும மருத்துவர்களின் பரிந்துரைப்படி, நீச்சல் பயிற்சிக்கு முன்பு சன் ஸ்கிரீன் உபயோகிப்பது சிறந்தது.

மாய்ஸ்சுரைசர்:

நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரில் கிருமி நாசினியாக குளோரின் கலந்திருப்பார்கள். ஆகையால் பயிற்சியை முடித்து வந்ததும் நல்ல தண்ணீரில் குளிப்பது முக்கியமானது. குளித்த பின்பு அதிக ஈரப்பதம் இருக்கக்கூடிய மாய்ஸ்சுரைசரை முழு உடலுக்கும் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதால் உடலில் வறட்சி ஏற்படலாம். அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் தோல் பராமரிப்பிற்கு சிறந்த வழி.

கூந்தல் பராமரிப்பு:

நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் கலந்திருக்கும் குளோரின், தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முடி உதிர்தல், வறட்சி, பிளவு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதனால் நீச்சல் பயிற்சி செய்யும்போது தலையில் தரமான தொப்பி அணிய வேண்டும். நீச்சல் பயிற்சிக்கு பின்பு தலைக்கு குளிப்பது நல்லது. அதேபோல கூந்தலுக்கு நல்ல கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க் போடுவது நல்லது.


Next Story