தாய்லாந்து ஸ்பெஷல் 'மாங்காய் சாலட்'


தாய்லாந்து ஸ்பெஷல் மாங்காய் சாலட்
x
தினத்தந்தி 13 Aug 2023 1:30 AM GMT (Updated: 13 Aug 2023 1:31 AM GMT)

சுவையான மாங்காய் சாலட், பொரியல் பொடி ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

தாய்லாந்து ஸ்பெஷல் 'மாங்காய் சாலட்'

தேவையான பொருட்கள்:

பூண்டு - 2 பல்

காய்ந்த மிளகாய் - 2

எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

நாட்டுச் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் - ½

சிவப்பு குடைமிளகாய் - 1

மாங்காய் - 1

புதினா இலை - 1 கைப்பிடி

கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி

முந்திரி அல்லது வேர்க்கடலை (பொடித்தது) - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

ஒரு மிக்சி ஜாரில் பூண்டு, காய்ந்த மிளகாய், எலுமிச்சம் பழச்சாறு, நாட்டு சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் எள்ளைக் கொட்டி வறுத்துக் கொள்ளவும். மாங்காயை மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு குடைமிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் மாங்காய், வெங்காயம், சிவப்பு குடைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, எள், உப்பு, அரைத்து வைத்திருக்கும் விழுது ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு லேசாக கலக்கவும். அதன்மேல் பொடித்த முந்திரி அல்லது வேர்க்கடலையை தூவவும். இப்போது தாய்லாந்து ஸ்பெஷல் 'மாங்காய் சாலட்' தயார்.

கர்நாடகா ஸ்பெஷல் 'பொரியல் பொடி'

காய்கறி பொரியல் தயார் செய்யும்போது, இந்த பொரியல் பொடியை இறுதியாக தூவி, சிறிது நேரம் கிளறி இறக்கினால் சுவை அதிகரிக்கும். இதை சூடான சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - ½ கப்

உளுந்து - ½ கப்

தனியா - ½ கப்

கொப்பரை தேங்காய் (துண்டுகள்) - ½ கப்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 15

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

அடி கனமான வாணலியில் கடலைப் பருப்பு, உளுந்து, தனியா, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை மிதமான தீயில் தனித்தனியாக போட்டு வறுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாயைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இவை அனைத்தும் ஆறிய பின்பு அவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் சுத்தமான ஈரமில்லாத பாட்டில்களில் சேமித்து வைக்கவும். இதை குளிர்பதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. பொரியல் தயாரிக்கும்போது, காய்கறிகள் வெந்த பின்பு அவற்றின் அளவுக்கு ஏற்றபடி 1 முதல் 3 டீஸ்பூன் வரை இந்தப் பொடியை சேர்க்கலாம்.


Next Story